துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி: விசாரனை ஆரம்பம்

1 6 துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி: விசாரனை ஆரம்பம்

யாழ்ப்பாணம், இளவாலை – பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளவாலை, பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

குறித்த காணியை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும், மற்றொரு தரப்பினரும் உரிமை கோரி வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (25) குறித்த காணியைத் துப்புரவு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சென்றபோது, அங்கு வந்த பெண்கள் இருவர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட தர்க்கத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் தனது தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்து பெண்களை அச்சுறுத்தியதாக இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், பொதுமக்கள் தன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தரப்பிலும் ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த இளவாலை காவல்நிலையப் பொறுப்பதிகாரி, இருதரப்பு முறைப்பாடுகளையும் கருத்திற் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்பப்படும் நிலையில், அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், உண்மைத் தன்மையைக் கண்டறியவும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.