துணை ஜனாதிபதியின் வருகையும் தூரப் போகும்; தமிழர் அபிலாசைகளும் : விதுரன்

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ண னின் கடந்தவார இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக காண்பிக்கப்படுகின் றது.
முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றில், இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரபூர்வ பயணம் இது என்பதால், இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுவதாகவும் வெளிப் படுத்தப்படுகிறது. ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறு வதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது, பாரதீய ஜனதா கட்சி யின் மிக முக்கியமான அரசியல் நகர்வுகளில் ஒன்றாகும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான ஆறு தலைமுறை குடியுரிமை அறிவிப்பு மற்றும் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், தமிழக அரசியல் களத்தில் பி.ஜே.பி-யின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதையே அடிப்படை நோக்க மாகக் கொண்டுள்ளது.
இதேநேரம், இந்திய துணை ஜனாதிபதியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகிய மூன்று பிரதான தரப்புகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஒன்றா கச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இந்த மூன்று தரப்புகளிலும் ஒன்பதுக்கும் அதிக மான கட்சிகள் உள்ளடங்கியிருப்பது, ஒரு சிறிய மக்கள் தொகையைக் கொண்ட தமிழ் சமூகத்திற்குள் நிலவும் அரசி யல் சிதறலைத் தெளிவாகக்காட்டுகிறது.
இத்தகைய பலவீனமான அரசியல் கட்டமைப்பு, இந்திய துணை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்ததுடன், தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் உட்கட்சி மற்றும் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் அவசியத்தை அவர் வலியுறுத்தவே வழிவகுத்திருக்கிறது.
தமிழ் தரப்பைப் பொறுத்தவரை, இந்தியாவே இன்றும் இலங்கையில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய ஒரே சக்தியாகத் தொடர்ச்சியான நிலைப் பாடாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த நிலைப்பாட்டின் நம்பிக்கையின் அடிப்படை யிலேயே, தமிழ்த் தலைவர்கள் தங்களது உள்ளக முர ண்பாடுகளைக் கூட சந்திப்பில் கொட்டித்தீர்த்துக் கொண்ட னர். அதேநேரம் இந்தச் சந்திப்பின்போது, தமிழ் தேசிய பேரவையினர் ஒரு மனுவைக் கையளித்தனர். அதில், ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வைச் சாத்தியமாக்குவதற்கும் இந்தியாவினால் இலங்கை அர சாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க முடியும் என்று குறிப் பிடப்பட்டிருந்தது.
காணி அபகரிப்புகள், பௌத்தமயமாக்கல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தாமதம் போன்ற விடயங்களில் இந்தியாவின் நேரடித் தலையீட்டையும் தமிழ்த் தலைவர்கள் வழக்கம்போலவே கோரியுள்ளனர். இருப்பினும், இந்த எதிர்பார்ப்புகள் எந்தளவுக்கு யதார்த்தமானது என்பதில் ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. ஏனென்றால் எந்த விடயங்கள் சம்பந்தமாகவும் துணை ஜனாதிபதி வாய் திறக்கவே இல்லை.
இதற்கு காரணங்களும் இல்லாமலில்லை.  ஏனென் றால் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவியே ஒரு ‘கௌரவ வேடம்’ தான். அப்படியிருக்கையில், துணை ஜனாதிபதி பதவி என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டியதில்லை. ஆனால் சி.பி.இராதாகிருஷ்ணனைப் பொறுத்த வரையில் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பில் செல்லாக்குச் செலுத்தக்கூடியவர்களில் மிக முக்கியமானவராக உள்ளார். அந்த பலத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அதுபற்றி மூலோபாய ரீதியாக தமிழ்த் தலைமைகள் சிந்தித்திருக்கவே இல்லை என்பது கவலைக்குரியது.
இதேநேரம், ஒரு காலகட்டத்தில், இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கான கருவியாக இந்தியா தமிழர் விவகாரத்தைப் பயன்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகத் தமிழ் அமைப்புகளுக்குப் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கிய காலத்திலிருந்து, இன்று இந்தியா கையாளும் விதம் முற்றிலும் மாறியிருக்கிறது.
தற்போது, கொழும்பைக் கையாளுவதற்குத் தமிழர் விவகாரம் ஒரு முதன்மைத் தந்திரமாகப் பயன்படுத் தப்படுவதில்லை. சீனா போன்ற போட்டி நாடுகள் இந்தியப் பெருங்கடலில் கால்பதிப்பதைக் தடுப்பதும், இந்தியாவின் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதும் இன்று இந்தியா வின் முதன்மை நோக்கமாக மாறியுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, தமிழ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குறித்துக் கூறிய பதில்கள், இந்தியாவின் இப்போதைய அலட்சியப் போக் கைச் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ் கட்சிகள்; மாகாண சபைத் தேர்தல்கள், கடந்த 12 ஆண்டுகளாகத் திட்டமிட்டே முடக்கப்பட்டுள்ளன. இது வடக்கு-கிழக்குக்கு மட்டுமல்லாது, இலங்கையின் ஒட்டு மொத்த ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் இழைக்கப்படும் அநீதியாகும் என்று வலியுறுத்தியிருந்தன.
ஆனால், தற்போதைய சூழலில், தேர்தல்களை நடத்துவதற்குப் பல சாக்குப் போக்குகள் அரசாங்கத்தினால் சொல்லப்படுகின்றன. தித்வா புயல், பொருளாதார நெருக்கடி, சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிப்பு என்று ஒவ்வொரு காலத்திலும் ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது.
இந்திய துணை ஜனாதிபதியிடம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கம் ‘சாதகமான சமிக்ஞைகளை’ காட்டியதாகக் கூறப்பட்டாலும், இது ஒரு வழக்கமான இராஜதந்திரப் பதிலுக்கும் மேலாக நடை முறையில் சாத்தியமாகப்போவதில்லை.
இவ்வாறான வாக்குறுதிகள் ஏற்கனவே இந்தியத் தலைவர்களுக்குப் பலமுறை வழங்கப்பட்டு, பின்னர் மறக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் மாகாண சபைகளை முழுமையாக இல்லாது ஒழிப்பதற்கோ அல்லது அவற்றைப் பலவீனப்படுத்துவதற்கோ திட்டமிட்டுச் செயல்படுகிறதா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங் கம், தேர்தல்களை நடத்துவதை விட, தங்களின் அரசியல் செல்வாக்கைப் பாதுகாப்பதிலேயே கூடுதல் ஆர்வம் காட்டுவதை இது உறுதிப்படுத்துகிறது.
அந்த வகையில் இந்தியாவின் பார்வையில் இந்த விஜயத்தின் பின்னணியில் உள்ள மற்றொரு மூலோபாய நோக்கம் எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாகும்.
திருகோணமலையைத் தெற்காசியாவின் எரிபொ ருள் கேந்திரமாக மாற்றுவது மற்றும் இந்தியா – இலங்கை இடையே குழாய் வழி எரிபொருள் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பது என்பனவே இந்தியாவின் நீண்டகால இலக்குகளாக உள்ளன.
2015இல் மோடி முன்வைத்த இந்தத் திட்டம், பல்வேறு காரணங்களால் காலதாமதமாகி வந்தது. தற் போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் சினோபெக் நிறுவனம் 4 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால், இந்தியா இந்த விவகாரத்தில் மிகுந்த அவசரம் காட்டுகிறது.
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் 51சதவீத பங்குகளை இந்தியாவின் மசகோன் டொக் நிறுவனம் வாங்கியதும், டிரெட்ஜிங் கோர்ப்பரேசன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும் தற்செயலானவை அல்ல.
துறைமுகக் கட்டமைப்புகள் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு வசதிகளைக் கைப்பற்றுவதன் மூலம், சீனா வின் செல்வாக்கைத் தடுத்து, இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முயல்கிறது. எனவே, துணை ஜனாதிபதியின் இந்த வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் புதிய பாய்ச்சலுக்கான இந்தியாவின் நாடிபிடித்துப்பார்க்கும் நகர்வாக அமைந்திருக்கிறது.
அதேநேரம், இந்திய துணை ஜனாதிபதி இலங் கைக்கு வருகை தருவதற்கு சரியாக 24 மணித்தியாலங் களுக்கு முன்னதாக கூடியிருந்த அமைச்சரவையானது, கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள ஆறு திட்டங்களுக்கான அனு மதியை அளித்திருந்தது.
இதுவொன்றும் புதிய திட்டங்களில்லை. 2371.83 மில்லியன் ரூபா இந்திய நிதியுதவியில் கிழக்கு மாகா ணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டு எப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் அதற்கான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. எனினும் 33 திட் டங்களில் ஒன்றுகூட முன்நகர்த்தப்படாதிருந்த நிலையில் தான் துணை ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக 6திட்டங்களுக்க இலங்கையின் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்தச் செயற்பாடானது, இந்தியாவை எவ்வாறு சமாளித்துக் கொள்வது என்ற அநுர அரசாங்கத்தின் புரிதலை நன்கு வெளிப்படுத்துகின்றது. அதேபோன்று இந்தியாவின் தேவையும், எதிர்பார்ப்பும் கூட குறித்த அனுமதி தான் என்பதும் முக்கியமாகின்றது.
அந்த வகையில் பார்க்கின்றபோது, இந்தியத் தலைவர்கள் இலங்கை வரும்போது இலங்கை அரசாங் கங்களால் வழக்கமாக வழங்கப்படும் அதே  ‘சாதகமான வாக்குறுதிகள்’ மீண்டும் மீண்டும் வழங்கப்படுகிறது, இது இராஜதந்திரத்தின் சலிப்பான சுழற்சியாகவே இருக்கையில், அது தமிழ் மக்களின் நீண்டகாலக் அபிலாசைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகின்றது என்பதில் பெருங்கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான குடியுரிமை வழங்கலில் காணப்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற் கான புதிய வரையறைகளையும், ஆறு தலைமுறைகளுக்கு அதனை நீடித்திருக்கும் அறிவிப்பைச் செய்தமையும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் புதிய விடியலுக்கானதாக கொள்ளலாம்.
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்ட கையளிப்பும், மேலும் பத்தாயிரம் வீட்டுத்திட்ட அறிவிப்பும் மூலோபாய நலன்களைத் தாண்டிய தார்மீகக் கடமையாக கொள்ள முடியும். அதற்கு அப்பால் இந்த விஜயத்தில் ‘இந்திய நலன்களை கடந்து’ வேறெந்த கனதிகளுமில்லை.