ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிக்கையிடும் போது, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் புவனேக எஸ். பெரேராவின் தொழில்முறை கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமையைத் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமாதான நடைபயணத்தை அறிக்கையிட்டுக் கொண்டிருந்தபோது, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிழற்பட ஊடகவியலாளர் புவனேக எஸ். பெரேரா வாய்மொழி மூலமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர்  முறைப்பாடு செய்துள்ளார்.

அதாவது, தான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, தன்னைத் தள்ளிவிட்டு அச்சுறுத்திய நபர், தன்னை ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் என அடையாளப்படுத்தியதாக புவனேக தெரிவித்தார்.

குறித்த நபர், இந்த நடைபயணத்தை அறிக்கையிடும் முழுமையான உரிமை தனியார் ஊடக நிறுவனமொன்றுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் நபர் இவ்வாறு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் என்பவர் பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஒரு அரச அதிகாரி என்பதால், அரசியல் பாகுபாடின்றி அனைத்து ஊடகங்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.