ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்துறந்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, திருகோணமலை மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், அங்குள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பெருமளவிலான தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமது மரியாதையைச் செலுத்தினர்.
அதேநேரம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை பண்ணையம்பதி பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் தியாகம் மற்றும் அவரது வரலாற்றுப் பயணம் குறித்த நினைவுப் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இதில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே வவுனியாவில் நீண்டகாலமாக சுழற்சி முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் அன்னை பூபதியின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
ஏ9 வீதியில் அமைந்துள்ள போராட்டப் பந்தலில் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீதிக்காகப் போராடி உயிர்துறந்த அன்னையின் போராட்டமே இன்றும் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அங்கிருந்த உறவுகள் தெரிவித்தனர்.
1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டக்களப்பில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி, ஒரு மாத காலத்திற்கும் மேலாக உணவு தவிர்த்து ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் தாயக மக்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.



