இந்தியத் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முக்கிய சந்திப்பு

Indian Vice President meets Prime Minister Harini - Newswire

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

அண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

இன்று காலை ‘INDIA-01’ விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த துணை ஜனாதிபதி மற்றும் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரை, இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் முறைப்படி வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர் தனது உத்தியோகபூர்வ சந்திப்புகளைத் தொடங்கினார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த இந்தியத் துணை ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையையும், இலங்கையின் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக, இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்த துணை ஜனாதிபதி, இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்துப் பேசினார்.

பிரதமர் வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நாகரிக மரபுகள் மற்றும் கலாசார விழுமியங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், மேலும் பல அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.