இறுக்கமான அரசியல் கட்டமைப்பை உருவாக்க தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை : சுரேஷ் பிரேமசந்திரன் 

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை முறியடிக்க, இன்னும் இறுக்கமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்துத் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழரசு கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்துப் பல கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.

தற்போதைய அரசியல் சூழலில் சிதறிப் போகாமல், ஒரு பலமான கட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துத் தமிழரசு கட்சி தற்போது ஆராய்ந்து வருகிறது

இது தொடர்பான சாதகமான முடிவுகள் விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, புதிய அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்னிறுத்தி ‘தமிழ் சட்டத்தரணிகள் பேரவை’ முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை விடுத்து, புதிய பெயர்களில் தனித்தனி குழுக்களாகச் செயற்படுவது சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.

அதேநேரம், அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுக்கும் பௌத்த மேலாதிக்கச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துத் தமிழ் சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதன்போது வலியுறுத்தினார்.