சித்திரை புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்கக்கிழமை (14), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழமையை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதால், தேசிய மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமது வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களின் கூரை மேல் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளைக் கொண்டிருப்பவர்கள், இன்று பிற்பகல் 3:00 மணி வரை தமது இன்வெர்ட்டர்களை சுயமாக அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், தேசிய அளவில் மின்சாரப் பயன்பாடு பெருமளவில் சரிவடைந்துள்ளது.
மின்சாரத் தேவை மிகக் குறைவாக இருக்கும் இவ்வேளையில், சூரிய சக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்கட்டமைப்பிற்குள் செலுத்தப்பட்டால், அது விநியோக முறையில் பாரிய தொழில்நுட்பக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என மின்சாரத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தைப் பாதுகாப்பாகவும், தடையின்றியும் முன்னெடுப்பதற்காகவே இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
EDL (Private) Limited மற்றும் NSO (Private) Limited ஆகிய நிறுவனங்களின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், மின்சாரத் தடைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என தேசிய மின்கட்டமைப்புச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



