கொலம்பியா: இராணுவ விமானம் விபத்து- 66 பேர் உயிரிழப்பு

கொலம்பியா நாட்டின் தெற்குப் பகுதியில் விமானப்படை விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில்   66 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 114 இராணுவ வீரர்கள் மற்றும் 11 பணியாளர்கள் இருந்ததாக கொலம்பியாவின் விமானப்படைத் தளபதி பெர்னாண்டோ சில்வா ருவேடா கார்லோஸ் தெரிவித்தார். இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, துருப்புகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் சி-130 ஹெர்குலிஸ் விமானமாகும்.

புடுமயோ மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லெகுய்சாமோ நகருக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானது. அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட அவசரக்கால மீட்புப் படையினர் விமானச் சிதைவுகளுக்கு இடையே உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.