இந்தியப் பெருங்கடலில் மூண்ட போர் ஈரானிய போர்க்கப்பல் தகர்ப்பும் இலங்கையின் இராஜதந்திர நெருக்கடியும்  : விதுரன்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர் வதேச அரசியலின் அதிகார மையமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், 2026 பெப்ரவரி 28இல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வெடித்த நேரடிப் போர், அமைதிப் பிராந்தியமாக கருதப்பட்ட இந்த கடற்பரப்பை பதற்றமான யுத்த களமாக மாற்றியுள்ளது.
குறிப்பாக, இலங்கையின் தெற்கு கடல் எல் லையில் இருந்து 19மைலில் ஈரானிய போர்க்கப்பல் அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த பெப்ரவரி 15 முதல் 25 வரை நடைபெற்ற ‘மிலான் 2026’ சர்வதேச கடற்படைப் பயிற்சி, வரலாற்றிலேயே மிகப்பெரிய கடல்சார் நிகழ்வாக அமைந்தது. 74 நாடுகள், 42 போர்க்கப்பல்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஈரானும் தனது நட்பு ரீதியான பங்களிப்பை வழங்கியிருந்தது. ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா (IRIS Dena), ஐஆர்ஐஎஸ் புஷேர் (IRIS Bushehr) மற்றும் ஐஆர்ஐஎஸ் லவான் (IRIS Lavan) ஆகிய மூன்று கப்பல்கள் இதில் கலந்துகொண்டன.
பயிற்சிகள் முடிவடைந்த நிலையில், வழக்கமான இராஜதந்திர மரபுகளின்படி இலங்கை கடற்படைத் தளபதி யின் அழைப்பை ஏற்று, இந்த மூன்று கப்பல்களும் இலங்கைக்கு ‘ஒத்துழைப்பு விஜயம்’ மேற்கொள்ளத் திட்ட மிட்டன. பெப்ரவரி 26ஆம் திகதி இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கை ஈரானிடமிருந்து இலங்கையிடம் விடுக்கப்பட் டது. ஆனால், அதே காலப்பகுதியில் சர்வதேச அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் இந்தக் கப்பல்களின் தலை விதியை மாற்றியமைத்தன.
ஈரானிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நெருங்கிய வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரைப் பிரகடனப்படுத்தினார். இந்தச் சூழலில், ஈரானிய கப்பல்களைத் தனது துறை முகத்திற்குள் அனுமதிப்பது சர்வதேச அளவில் தன்னை ஒரு தரப்புடன் அடையாளப்படுத்தும் என்று இலங்கை அரசாங்கம் அஞ்சியது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான அரசாங்கம், போர்ச் சூழலைக் காரணம் காட்டி அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்தது. இலங்கை கடல் எல்லைக்கு (19 கடல் மைல்கள்) அப்பால், ஆனால் பொருளாதார வலயத்திற்குள் இந்தக் கப்பல்கள் காத்திருக்க நேரிட்டது.
இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எடுப்பதில் ஏற்பட்ட தயக்கமே இறுதியில் ஒரு பாரிய அழிவுக்கு வழி வகுத்தது என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங் கம் தயாராக இல்லை. ஈற்றில் இழைக்கப்பட்ட தவறுக்கு பிராச்சியத்தம் தேடும் செயற்பாட்டில் அது இறங்கியுள்ளது.
மார்ச் 4ஆம் திகதி அதிகாலை 5:08 மணியளவில், காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் தரித்து நின்ற ஐஆர்ஐஎஸ் டேனா மீது அமெரிக்காவின் மார்க் 48 (Mark 48) ரக டோர்பிடோ ஏவு கணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
1,500 தொன் எடையுடைய, அதிநவீன தாக்குதல் வசதிகளைக் கொண்ட இந்த போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் இலக்கு வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஈவிரக்கமற்றதாக அமைந்தது. கப்பல் இரண்டாகப் பிளந்து சில நிமிடங்களிலேயே கடலுக்குள் மூழ்கியது.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை நடத்திய மீட்புப் பணிகளின் போது ஈரானிய கடற்படையைச் சேர்ந்த 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். துரதிஸ்டவச மாக 90பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதம், கப்பலின் அடித்தளத்தைச் சிதைக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த பின்னணியை ஆராயும்போது, இலங்கை அரசாங்கம் எதிர்கொண்ட இராஜதந்திர நெருக்கடி அப்பட்டமாகத் தெரிகிறது. மார்ச் 4ஆம் திகதி அதிகாலை காலி கடற்பரப்பில் அபாய சமிக்ஞை ஒலித்தபோது, அதுவொரு பாரிய போர்க்கப்பல் சிதைக்கப்பட்டதன் விளைவு என்பதை யாரும் முதலில் அறிந்திருக்கவில்லை.
95 மீற்றர் நீளம் கொண்ட ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல், ஈரானிய கடற்படையின் பெருமையாகக் கருதப் பட்ட ‘மௌஜ்’ (Mowj) வகையைச் சார்ந்தது. இது ஹெலி கொப்டர்களைத் தரையிறக்கும் வசதி கொண்ட ஒரு முழுமையான தாக்குதல் கப்பல் என்பதால், அதனை அமெரிக்கா முதன்மை இலக்காகக் கொண்டது.
இலங்கைத் தரப்பில் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம், அந்தக் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் பாது காப்பற்ற நிலையில் நிறுத்தி வைத்திருக்கக் காரணமானது. ஒருவேளை உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தால், இலங்கை கடல் எல்லைக்குள் போர்க்கப்பலைத் தாக்கு வதற்கு அமெரிக்கா தயங்கியிருக்கலாம் அல்லது சர்வதேச சட்டங்களின்படி அது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இச்சம்பவத்தில் மற்றுமொரு அதிர்ச்சியான தகவல் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசிடமிருந்து வந்தது. தாக்குதல் நடத்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய வீரர்கள் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவர்கள் வழக்கமான கூட்டுப் பயிற்சியில் இருந்ததாகக் கூறினாலும், இது இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தீவிரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இது பிராந்திய நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்த கப்பல்கள் அதன் அண்டையிலேயே தாக்கப்பட்டிருப்பது, எதிர்கால சர்வதேச கூட்டுப் பயிற்சிகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
மறுபுறம், ஈரானின் இரண்டாவது கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் எதிர்கொண்ட சிக்கல் இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூட்ட வைத்தது. டேனா தகர்க்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இயந்திரக் கோளாறு காரணமாக புஷேர் கப்பல் அவசர உதவி கோரியது.
இந்த இக்கட்டான நிலையில், 11 மணிநேர நீண்ட விவாதங்களுக்குப் பின்னரே மனிதாபிமான அடிப்படையில் மீட்பு நடவடிக்கைக்கு இலங்கை அனுமதி அளித்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இறுதியில், புஷேர் கப்பலில் இருந்த 208 மாலுமிகள் வெலிசறை கடற் படை முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
மூன்றாவது கப்பலான ஐஆர்ஐஎஸ் லவான், கேரளா வின் கொச்சி துறைமுகத்தைச் சென்றடைந்திருப்பது இந்த மர்மமான சூழலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 80 பேர் கொண்ட அந்தக் கப்பலில் 183 பேர் இருந்ததாகக் கூறப்படுவது, டேனா கப்பலில் இருந்து தப்பியவர்களை லவான் மீட்டிருக்கலாம் என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய மண்ணில் ஈரானிய வீரர்கள் தஞ்சம் புகுந்திருப்பது, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா வகிக்கும் சமநிலைப்படுத்தும் பாத்திரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஆனால் அடுத்தகட்டமாக இந்தியாவின் நகர்வு இப்போது உன்னிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளதாக உள்ளது.
ஏனென்றால் தனது அழைப்பில் வருகை தந்தி ருந்த ஈரானிய கப்பல்களை இந்தியா பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்ற வாதம் இப்போது தீவிரமாகியுள்ள நிலையில் இந்தியா சர்வதேச கடற்பரப்புக் குள் பிரவேசித்து விட்டால் இந்தியாவால் பாதுகாப்பை வழங்க முடியாது என்று பதிலளித்துள்ளது.
இதேநேரம் ஐஆர்ஐஎஸ் டேனாவின் தாக்கியழிப்புச் சம்பவம் இலங்கையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புத் தன்னாதிக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போர் தொடங்குவதற்கு 12 நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க பசிபிக் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் இலங்கைக்கு விஜயம் செய்தமை, தற்செயலான நிகழ்வா அல்லது திட்டமிடப்பட்ட வியூகமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு ரேடர்களும், கப்பல்களும் விமானங்களும் இலங்கையின் பாதுகாப்பிற்காகவா அல்லது அமெரிக்காவின் தேவைகளை நிறைவு செய்யவா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இலங்கை தனது நட்பு நாடொன்றின் கப்பல் களுக்கு அனுமதி வழங்குவதில் காட்டிய தாமதம், பாரிய உயிர்ச்சேதத்திற்கு மறைமுகக் காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக, எதிர்க் கட்சி உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் இந்தத் தாமதத்தைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்தின் இராஜதந்திர பலவீனத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஈரான் மீதான போர் அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்போர் இலங்கையின் வாசலில் வந்து நிற்கிறது. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா புதிய போர்முனை யைத் திறந்துள்ளது. இந்நிலையில், இலங்கை தவிர்க்க முடியாதபடி வல்லரசுப் போட்டிக்குள் வலுவாகச் சிக்கியுள் ளது.
நடுநிலை நாடு என்று தன்னைத் தொடர்ந்து கூறிக்கொள்ளும் இலங்கைக்கு, ஐஆர்ஐஎஸ் டேனாவின் மூழ்கடிப்பு கசப்பான பாடமாகும். அந்தப் புரிதல் இன்னமும் இலங்கைக்கு ஏற்படவில்லை.
தற்போது கடற்படை வீரர்களின் உடல்களைப் பொறுப்பேற்பதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. உயிருடன் தங்கவைக்கப்பட்டுள்ள 240 கடற்படை வீரர்களை மீண்டும் உயிருடன் நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் ஈரான் அதிகம் விரும்புகிறது.
இப்போர்ச் சூழலில் அவர்கள் எவ்வாறு தாயகம் திரும்புவார்கள் என்பதும், எஞ்சியுள்ள கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பை எப்படிக் கடக்கும் என்பதும் தற்போதைய மிகப்பெரிய கேள்வியாகும்.  இந்தியப் பெருங்கடல் இனி அமைதிப் பிராந்தியமாக இருக்குமா அல்லது வல்லரசுக ளின் நேரடி மோதல் களமாக மாறுமா என்பது ஈரானிய கப்பல்களினதும், கடற்படை வீரர்களினதும் பாதுகாப்பான மீள் திரும்பலில் தான் தங்கியுள்ளது.