இலங்கையின் செயற்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

இலங்கை தற்போது பெற்று வரும் பொருளாதார மீட்சிக்கு, அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே முக்கிய காரணம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

கடினமான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு, தற்போதைய அரசாங்கம் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்படுகிறது என்ற நம்பிக்கையே அடிப்படை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் மற்றும் வீண் விரயங்களை ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது. “அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக ஏற்படும் பொருளாதார வலிகளைத் தாங்கிக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குச் சென்றிருந்தபோது விமானத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணியாளர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு, நமது நாட்டிற்கு உதவுவதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இந்த அரசாங்கத்திற்கு உதவுங்கள், இவர்கள் நேர்மையான மனிதர்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  மக்களின் இந்த உணர்வே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார்.

அரசாங்கங்கள் பொருளாதார நிறுவனங்களை நடத்துவதை விட, வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.  அந்த வகையில், இலங்கை இப்போது சரியான பாதையில் பயணிக்கிறது,” என்று குறிப்பிட்ட ஜோர்ஜீவா, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைவரையும் சென்றடைய இத்தகைய சமூக நம்பிக்கை மிக அவசியமானது என்று வலியுறுத்தினார்.