நாமலின் உரை ரத்தானமைக்கு அலி சப்ரி கவலை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் விரிவுரைகள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற விவாத சங்கங்கள் பல தலைமுறைகளாக துணிச்சலான விவாதம் மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களாக நிற்கின்றன என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

கேம்பிரிட்ஜ் சங்கத்தில் உரையாற்றிய தனது சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த அலி சப்ரி, இத்தகைய தளங்கள் வேறுபாடுகளை வெளிப்படையாகவும், மரியாதையுடனும், அறிவுசார் நேர்மையுடனும் எதிர்கொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் அழுத்தம் காரணமாக நிகழ்வை ரத்து செய்வது வருந்தத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது அவை சிவில் சமூகத்தில் பிளவுகளுக்கு வழிவகுக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புக்கு காரணமானவர் என்ற அடிப்படையில் நாமல் ராஜபக்ச ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்ரிஜ் யூனியனில் உரை நிகழ்த்துவதற்கு தமிழ் அமைப்புகள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. தமிழ் அமைப்புகளின் கடுமையான அழுத்தங்களை அடுத்து அவரது உரை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.