ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைக்கும் செயற்பாடு ஜெனிவாவில்…

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச சமூகத்திடம் நீதிக் கோரி ஜெனிவா ஐ.நா திடலில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று (23) ஆரம்பமாகியுள்ளது.
இதனை முன்னிட்டே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கான நீதியையும், சர்வதேச விசாரணையையும் வலியுறுத்தி இத்தகைய போராட்டங்கள் ஜெனிவாவில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஐ.நா வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள திடலில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் கோர முகத்தை உலகுக்கு உணர்த்தும் சாட்சியங்களாக இவை அமைந்துள்ளன. இந்தநிலையில், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்குச் சர்வதேச விசாரணை கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கோரியும் அங்குக் கூடியுள்ள புலம்பெயர் மக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.