மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப் படும் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து, அதற்கு தேவையான முன்மொழிவுகள் மற்றும் பரிந்து ரைகளை சமர்ப்பிக்க விசேட நாடாளுமன்றக் குழு நியமிக் கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் செயல்படும் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (20/02/2026) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அந்த குழு விபரம்:
1. அமைச்சர் விஜித ஹேரத், தலைவர். தேசியமக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கம்பகா.
2. ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தி பா.உ, மொனராகலை
3. மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பா.உ.
4. சுனில் வட்டகல, தேசிய மக்கள் சக்தி, பிரதி அமைச்சர், கொழும்பு.
5. லக்ஸ்மன் நிபுனாராச்சி,தேசிய மக்கள் சக்தி பா.உ, கொழும்பு.
6. இரா சாணக்கியன், இலங்கை தமிழ் அரசுக்கட்சி, பா.உ, மட்டக்களப்பு.
7. திருமதி சமன்மலீ குணசிங்க, தேசியமக்கள் சக்தி, பா.உ, கொழும்பு.
8. முனீர் முலாஃபர், தேசிய மக்கள் சக்தி பிரதி அமைச்சர் அம்பாறை.
9. அருண் ஹேமச்சந்திர, தேசியமக்கள் சக்தி பிரதி அமைச்சர், திருகோணமலை.
10. தர்மப்பிரிய விஜேசிங்க, தேசிய மக்கள் சக்தி பா.உ, கம்பகா,
11. சந்தன சூரியாராச்சி, தேசிய மக்கள் சக்தி பா.உ.கொழும்பு.
12. நிசாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பா.உ. ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த குழு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தற்போதுள்ள சட்ட மற்றும் நடைமுறைத் தடைகளை நீக்கி மிகவும் பொருத்தமான தேர்தல் முறையை அடையாளம் காண்பதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
03 மாதங்களில் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் அதாவது 20/02/2026 தொடக்கம் 20/05/2026 வரை ஆராய்ந்து அறிக்கை சமர்பித்தபின்னர் அந்த அறிக்கை பாராளுமன் றத்தில் சமர்பித்து மாகாணசபை தேர்தல் தொடர்பான முடிவு கள் அறிவிக்கப்படும்.
இதில் உள்ள எதிர்கட்சி தலைவர் சஜீத்தால் நியமிக் கப்பட்ட நால்வர், அல்லது ஐவர் மட்டுமே பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு ஒற்றைக்காலில் நிற்பார்கள். ஏனைய எட்டு ஆளும் தரப்பினர் அதனை ஏற்க மாட்டார்கள் என்பது தெளிவு.
அறிக்கையில் 12 உறுப்பினர்களும் பழைய முறை யில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முடிவுகளை எடுத் தால் சிக்கல் இன்றி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 2017 செப்டம்பர் 22 ல் நல்லாட்சி அரசில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையிலான மாகாணசபை திருத்த சட்டம் இரத்து செய்யப்பட்டு 1988 ல் நிறைவேற்றப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல் 09 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் அல்லது கட்டங்களாக நடத்தப்படுவதற்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தவுடன் தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மட்டுமே உண்டு.
ஏற்கனவே 2023 மே 27ல் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனாலும் 2025 ஜூலை 24 மற்றுமொரு பாராளு மன்ற உறுப்பினராலும் பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனிநபர் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந் தது.
அந்த பிரேரணையில், “2017ஆம் ஆண்டு செப்டம் பர் 21ஆம் திகதியன்று வலுவிலிருந்த 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும் 2017 செப்டம்பர் 22ஆம் திகதியிருந்து நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றி அத் தகைய செயல் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவு க்கு இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இரண்டு கட்டங்களில் வழங்கப்பட்ட தனிநபர் பிரேரணை களை கடந்த கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமோ, தற்போதய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவின் அரசாங்கமோ கணக்கில் எடுக்கவில்லை. இரண்டு பிரேரணைகளும் குப்பைத்தொட்டியில் போடப் பட்டன.
நல்லாட்சி அரசில் 2017 ல் மாகாணசபை தேர்தலுக்கு பொறிவைத்து புதிய நடைமுறையுடன் கலப்பு தேர்தல் முறை, மற்றும் புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே மாகாணசபை தேர்தல் என்ற சட்ட திருத்த ஆலோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது அதற்கு ஆதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளும் தலையாட்டி சட்டத்தை நிறைவேற்றியிருந்தனர்.
2020 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாகாணசபை தேர்தல் பழைய முறையில் நடத்துமாறு அழுத்தம் கொடுக்க தொடங்கியது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்தேசிய கட்சிகளும், எதிர்கட்சிகளும் என்றும் இல்லாதவகையில் மாகாணசபை தேர்தல்கள் உடனே நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இதில் இன்னொரு படி மேலே சென்று சர்வதேச இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் மாகாணசபை தேர் தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் கெஞ்சும் நிலையும் அண்மையில் காணமுடிந்தது.
இதில் தென்னிலங்கை எதிர்கட்சிகள் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதற்கான கார ணம் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவைக் குறைத்து தமது பலத்தை நிரூபிக்கும் பலப்பரீட்சைக்காக இந்த தேர்தலை பாவிக்கப்பார்க்கிறார்கள்.
வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய கட்சிகளும் உதட் டால் அதிகாரப்பரவலுக்காக மாகாணசபை தேர்தலை நடத்து மாறு கோரிக்கைவிட்டாலும் அவர்களும் பதவி ஆசை, முதல மைச்சர் ஆசை, கதிரை ஆசைக்காகவும் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.



