யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவனுக்கு நீதிக் கோரி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று (22) முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதன்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதேவேளை, குறித்த சிறுவனின் மாமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும், காவல்நிலையத்தில் இது குறித்துமுறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் கடந்த 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



