தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களது வேதனம் தொடர்பில் பிரதமர் விளக்கம்

ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை என்றும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19) தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“எமது வங்கிக் கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை நாட்டுக்குக் காட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளும் தங்கள் கட்சி நிதிகள் தொடர்பாக இவ்வாறு செயற்பட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

“ஜே.வி.பி உறுப்பினர்கள் நீண்ட காலமாகத் தமது வேதனத்தை கட்சி நிதிக்கே அனுப்பி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியும் அதே கலாசாரத்தையே பின்பற்றுகிறது. தனிப்பட்ட ரீதியில் எவரும் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எமது 159 உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். அனைவரினதும் வாழ்க்கைக் கதைகளை இங்கே கூற முடியாது, ஆனால் நாங்கள் எப்படியோ வாழ்கிறோம். ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் முன்மாதிரியாகச் செயற்படுகிறோம்” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் கருத்துக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, “பொய் சொல்வதே ஜே.வி.பியின் கலாசாரம்” எனக் கடுமையாகச் சாடினார்.

“பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கட்சி நிதியிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் சம்பளம் பெறாமல் இருப்பதில்லை.”
“கட்சியின் உறுப்பினர்களின் பெயரிலேயே வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை மட்டுமே கட்சிக்கு அனுப்பிவிட்டு, எஞ்சிய பகுதியை அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள் என்பதை நான் நிரூபிப்பேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

சமிந்த விஜேசிறியின் இந்தக் கருத்துக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. “தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் இணைந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்று சமிந்த விஜேசிறி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், “மக்களின் பணத்தை யார் முறைகேடாகப் பயன்படுத்தினார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். எமது 159 உறுப்பினர்களிடமும் ஏதேனும் ஒரு தவறைக் கண்டுபிடிக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.