டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றி முதல்முறையாக பேசியுள்ள மோதி, இதன் பின்னால் உள்ள ‘சதிகாரர்கள்’ தப்பிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மிகவும் கனத்த இதயத்துடன் பூடானுக்கு வந்துள்ளதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.
“டெல்லியில் நேற்று மாலை நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இன்று ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் நிற்கிறது.” என்றார்.
தனது உரையின்போது ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிய மோதி, “இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.” எனத் தெரிவித்தார்.
“நேற்று இரவு முழுவதும் இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இந்தச் சதித் திட்டத்தை நமது அமைப்புகள் ஆழம் சென்று விசாரிப்பார்கள்.” எனத் தெரிவித்தார்.



