முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்தின் ஊடாக 14 ஆயிரம் கெரம் போர்ட்கள் மற்றும் 11 ஆயிரம் தாம் போர்ட்கள் என்பவற்றை இறக்குமதி செய்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.