அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை (10) அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு இன்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, நாளை (10) குறித்த கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை எட்ட முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்கா அறிவித்துள்ள வரி, இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது’.
‘எனவே, பேச்சுவார்த்தை மூலம் இந்த விடயத்தில் நிவாரணத்தை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அனுப்படும் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை மாற்றுவதற்கு தயாரென தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



