இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை கடந்த 2024ஆம் ஆண்டு வரை 2 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக 2012ஆம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை 14 லட்சத்து மூவாயிரத்து 731 நபர்களினால் அதிகரித்துள்ளது.  இது 6.9 சதவீத வளர்ச்சியாகும்.

அத்துடன் வருடாந்த சராசரி வளர்ச்சி 0.52 சதவீதமாகும். தரவுகளுக்கு அமைய, அதிக சனத்தொகை பரம்பல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. அதேபோன்று அதிக சனத்தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீற்றர் பரப்பில் மூவாயிரத்து 549 நபர்கள் வரையில் வசிக்கின்றனர். மிகவும் குறைவான சனத்தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன் அங்கு ஒரு சதுரகிலோமீற்றர் பரப்பில் 50 நபர்கள் வசிக்கின்றனர்