கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட சில உள்ளூராட்சிமன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள நீதிப்பேராணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவற்றை எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய குறித்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
அதேநேரம் நீதிமன்றில் இன்று சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி மன்றாடியர் நாயகம், உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஒத்திவைப்பதனால் அரசாங்கத்துக்கு நிதிச் சிக்கல் ஏற்படும் என்றும் மன்றுரைத்தார்.
இதற்கு பதிலளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் மொஹமட் லஃபார் தாஹீர், விரைவில் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்து தீர்ப்பை அறிவிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
உரிய காலத்தினுள் குறித்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்து அவற்றை நிராகரிப்பதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என்று உத்தரவிடுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



