ரோம் சாசனத்தை ஏற்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து தங்களது தரப்பு ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
‘குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற பாரய மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பாரிய அளவில் மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்புக்கூறும் திட்டத்தை நிராகரித்தமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்’.

‘இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கு நீதியை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்பட வேண்டும்’ என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.