கச்சத்தீவை இலங்கையின் கட்;டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், கச்சத்தீவு தொடர்பாக ஸ்டாலின், மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இதில், பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய கடற்றொழில் உரிமையை பாதுகாப்பதற்கு, கச்சத்தீவின் கட்டுப்பாடு இந்தியாவினால் மீட்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று எம்.கே.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த தினம் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதன் விளைவாகவே, தமிழக மீனவர்களின் கடலுரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.யாழ்ப்பாணத்தில் நேற்று (03) ஊடகங்களுக்கு கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், ‘கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது’ என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால், அதனுடன் கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



