03. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர், கட்சியின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச உறுதிப்படுத்தினார். எனினும், அவரது பதவி விலகலுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
ஐந்து தசாப்த கால அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதியான இம்தியாஸ் பாக்கீர் மார்கர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அத்துடன், அந்த கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராகவும் இம்தியாஸ் பாக்கீர் மார்கர் பணியாற்றியிருந்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலர் அதன் தலைவர் சஜித் பிரேமதாச மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல அரசியல் தரப்பினர் தனித்து செல்வது குறித்து ஆராய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு பின்னர் பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு எத்தணிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் விடயத்தில் இவ்வாறு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



