பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் – அரசாங்கம் உறுதி

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (11) செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அல்ஜஷீராவுடனான நேர்காணலின்போது, படலந்த வதை முகாம் தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டமை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

‘வடக்கு, தெற்கு, மலையகம் என பல பகுதிகளில் நாட்டில் பல தசாப்தங்களாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் அநேகமாக இடம்பெற்றுள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஜனநாயகமும், மனித உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்’.
‘இது தொடர்பாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் என்ற வகையில் எம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
‘அதற்கமைய, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டது’.

‘குறித்த அறிக்கையை இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, ‘பட்டலந்த சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும்’ என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், ‘ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்லாது இந்த சட்டவிரோத வதை கூடத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட சகலரையும் சட்டத்தின் முன்நிறுத்தி, நீதியை நிலைநாட்டுவதற்கான பின்னணியொன்றை தற்போதைய அரசாங்கம் உருவாக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.