‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலைக்கான கையொப்பத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய தினமே இட்டுள்ளமை கோப் குழு என்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
கணக்காய்வு அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. செலவீனங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பணிப்பாளர் சபை அனுமதியை வழங்கியிராத சந்தர்ப்பத்திலேயே இந்தக் காசோலையில் முன்னாள் தலைவர் கையொப்பமிட்டிருந்ததாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளே இவ்வாறு காசோலையில் கையெழுத்திடப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு, முன்னாள் தலைவரின் அழுத்தத்திற்கு அமைய செலவுகளுக்கான ஒப்புதலை வழங்கி காசோலையைக் கையளிக்க வேண்டி ஏற்பட்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் சுட்டிக்காட்டினர். ‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் தலைவர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அவ்வாறு செயற்பட்டதாகவும், தாம் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் இடமாற்றங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்’ என்றும் அதிகாரிகள் கோப் குழுவில் தெரிவித்துள்ளனர்.
‘இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை வெளியிடவேண்டி ஏற்பட்டதாகவும்’ அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் ‘இது மிகவும் உணர்திறன் மிக்க விடயம்’ என்று கோப் என்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நிசாந்த சமரவீர தெரிவித்துள்ளார் ‘அரசாங்க அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’. ‘அத்துடன், இதுபோன்ற சம்பவங்களின் போது அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான ஆளுமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்’ என்றும் கோப் குழுவின் தலைவர் நிசாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.



