‘ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்ட போதிலும் தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது’ என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தின் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு – கிழக்கு இன முரண்பாட்டுக்கு சமஷ்டி சிறந்த தீர்வு என்று குறிப்பிட்டார்’.
‘அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது’. ‘சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
‘நாட்டின் பொருளாதாரம் மூலதன செலவுகள் ஊடாகவே கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டின் மிக நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்’.
‘குறிப்பாக பாதுகாப்பு செலவுக்கு மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் 11 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம், சண்டை இல்லாத நேரத்தில் 442 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது’.
‘இன்னும் பெரும்பாலான மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மிதமிஞ்சிய இராணுவ ஆளனியுடன் இருக்கும் இலங்கையில் 11 வீதம் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
‘இதேவேளை இந்த நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘வளமான இலங்கையை கட்டியெழுப்ப புலம்பெயர் இலங்கையர்களே வாருங்கள் என்று ஜனாதிபதி அழைத்துள்ளார்’. ‘அவர்களின் தொடர்பை ஜனாதிபதி விரும்புகிறார்’. ‘ஆனால், இந்த மண்ணில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பேசுவதற்கு தயங்குகின்றனர்’ என்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.



