பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி ஆசிரியர்

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி மீண்டும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை மறுதினம் (17) முற்பகல் 9.30 அளவில் பயங்கரவாத தடுப்பு மற்றும விசாணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டில் ஈழம் வரைபடம் மற்றும் கனகபுரம் மயானத்தின் வாயிலின் மாதிரியை உருவாக்க உதவிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் நாளை மறுதினம் (17) பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு குறித்த ஆசிரியருக்கு பொலிஸார் அனுப்பியுள்ள தகவல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பிக்கும் வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தம்மை விசாரிக்க வேண்டுமெனக் கூறி அச்சுறுத்தினர்’ என்று கோணாவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.