இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான முறைப்பாடு மீளப் பெறப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய பிரச்சினை, யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் கடந்த 11ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக் கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் அது மோதலாக மாறியது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கியமையால், தலையில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் பொலிஸாரிடம் முறைப்பாடளித்ததுடன் காயமடைந்த நபரும் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து முறைப்பாடளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, ‘இரு தரப்பினரும் சமரசமாக செல்வதற்கு உடன்பட்டு முறைப்பாடுகளை மீளப் பெற்றுள்ளனர்’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.