‘இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ளதாக’ அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
‘குறித்த வழக்கின் பிரதிவாதிகளான தாம் உள்ளிட்ட மூன்று பேரினால் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த அடிப்படையில் எதிர்வரும் 13ஆம் திகதி வழக்கு முன் விசாரணையின்போது இந்த முன்மொழிவுகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்’ என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவரும் பொருட்டே குறித்த முன்மொழி வரைவு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



