ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியது இலங்கை

ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்குக் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பானிய அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ கடன் வழங்கும் தரப்புடன் அடுத்த கட்ட கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் முறையானதொரு உடன்படிக்கைக்கு வழிவகுத்துள்ளது. ஒப்பந்தங்களுக்கான சட்டப்பூர்வ அனுமதியை உறுதி செய்யும் வகையில், தேவையான ஆவணங்களுக்கு சட்ட மா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதேவேளை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துக்கும் இலங்கை விமான நிலைய விமான சேவைகள் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை நிறைவு செய்வது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் சர்வதேசத்திடம் இருந்து மேலும் நிதி ஆதரவை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.