வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் முடிவு

‘எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது’ என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘குறித்த தொகை அண்மையக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும்’ என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘இந்த ஆண்டு 4% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது’ என்றும், ‘அந்த இலக்கை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 4% க்கும் அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது’. ‘பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இதுவொரு  சவாலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு சவாலாக நாங்கள் கருதுகிறோம்’என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘முந்தைய அரசாங்கங்களின்  செயற்திறனின்மை காரணமாக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை’. ‘சுமார் 75% முதல் 80% மட்டுமே செலவிடப்பட்டது’. ‘ஆனால் இந்தமுறை ஒதுக்கப்பட்ட பணத்தை முழுமையாகச் செலவிட தேவையான வழிமுறையை தயாரித்து வருகிறோம்’ என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘சுற்றுலாத் துறையில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது’. ‘இந்த ஆண்டு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர  எதிர்பார்க்கப்படுகிறது’.

‘குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பற் துறைகளில் முன்னேற்றத்தை அடைய முடியும்’. ‘இந்தியா மற்றும் சீனாவுடன் பல முக்கிய திட்டங்கள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்’.’எனவே, நாட்டிற்கு கணிசமான அளவு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியுமென நம்பிக்கையுடன் உள்ளோம்’ என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.