தொடரும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் வகுப்பு புறக்கணிப்பு – உயர்கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பம்

‘யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு அறிக்கை கோரியுள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர், குறித்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

‘குறித்த பிரச்சினை தொடர்பில் உயர்கல்வியமைச்சு தலையிட்டு தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்’ ‘நாட்டின் பல்கலைகழக கட்டமைப்பு தொடர்ச்சியாக இயங்க வேண்டும்’ ‘அதற்கு தடையை ஏற்படுத்தும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனை உடனடியாக தீர்ப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

‘அதேநேரம், தொழிற்சங்கத்தினரும், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதில் எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லையாயின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பதவி விலகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் அவர் மீண்டும் பீடாதிபதியாக பதவியேற்பதற்கு உரிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வகுப்பு புறக்கணிப்பு தொடர்கின்றது.

இந்தநிலையில் ‘பதவி விலகிய கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது’ யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா தெரிவித்தார்.

‘யாழ் பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அவை நிறைவேற்றப்படும்’ என்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.