அநுரவின் ஆட்சியும்.! அரசியல் காட்சியும்..!-பா.அரியநேத்திரன்

பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர  குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அரசியல் காட்சிகளை பார்த்தால் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்தும் நடவடிக்கையே இப்போது முன்னிலைப் படுத்துவது தெளிவாக தெரிகிறது.

இதற்கு நல்ல உதாரணம் கடந்த 2024, டிசம்பர்,06, ம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கை யின் தேசிய மக்கள் சக்தி சமர்பித்த நான்கு மாத செலவறிக்கை இதில் பாதுகாப்புக்கான அதிக ஒதுக்கீடுகள் மொத்தம் ரூபா 208.01 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி (92 பில்லியன்) சுகாதாரம் (161.99 பில்லியன்) ஆகிய முக்கிய  துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை விட அதிகமாக ஒதுக் கப்பட்டுள்ளது.

இதேபோல் புத்தசாசன திணைக்களத்துக்கு ரூபா 270.5 மில்லியன், தொல்லியல் திணைக் களத்துக்கு 701.5 மில்லியன் ஒதுக்கீடுகள், சமூக அவசியங்களை விட பௌத்தமத, கலாச்சார முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்றன.

இலங்கையில் யார் ஆட்சிபீடத்தில் ஏறினாலும் பாதுகாப்பு தரப்பையும், பௌத்த மதத்தை யும் திருப்திபடுவதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது.

ஜனாதிபதியால் 2024, செப்டம்பர்,23 பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய் கொந்தாவிடம் பாதுகாப்பு அமைச்சில் கடமை களை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் முதலாவதாக கண்டி தலதா மாளிகைக்குச் சென்று ஆசிபெற்றபின்னர் ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

என்னுடைய தலைமையின் கீழ் நாட்டு மக்கள், பொது மக்கள் அளெசகரியங்களை எதிர்கொள்ளும் அனைத்து முறைகளிலும் ஏற் படும் சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன.

அந்த சம்பிரதாயபூர்வமல்லாத அச்சுறுத்தல் களுக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணமளித்து முப்படையினருக்கும் காணப்படும் இயலுமையை மேலும் முன்னேற்றமடையச் செய்து அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அந்த பணியை நிறைவு செய்வதே எமது அரசின் எதிர்பார்ப்பு.

ஆயுதப்படைகளை தொழில்சார் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்படவுள் ளோம்.

இராணுவத்தின் அனைத்து பக்கத்திலும் நவீன தொழில்நுட்பம், பயிற்சி, பயற்சிப் பெற வேண்டிய வாய்ப்பு, தொழில் ரீதியாக உயர் நிலைக்குச் கொண்டுச் செல்வதற்கான அனைத்து காரணங்களையும் கண்டறிந்து முறையான வகையில் செயற்படுவதே எமது எதிர்பார்ப்பு“ என்றார் இவருடைய இந்த கருத்தை பார்த்தால் தேசிய பாதுகாப்புக்கு எங்கிருந்து அச்சுறுத்தல் உள்ளது என்பது விளங்கவில்லை. இதேபோல் புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 04 ஜனவரி 2025 அன்று கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதி யாக பதவியேற்ற பின்னர் தளபதியின் முதலாவது விஜயம் ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயமாகும். அங்கு வருகை தந்த இராணுவத் தளபதியை ஸ்ரீ தலதா மாளிகையின் நிர்வாகச் செயலாளர் வரவேற்றதை காணமுடிந்தது.

இலங்கை அரசியல் பௌத்த மதத்துடன்பின்னிப்பிணைந்துள்ளது. இவ்வாறான அரசியல் வாதிகள் அல்லாத அதிகாரிகளின் நடவடிக்கையால் புலப்படுகிறது.

ஒருபுறம் மாகாணசபைகளுக்கு காணி பொலிஷ் அதிகாரம் தேவை என வலியுறுத்தும் நிலையில் இப்போது அநுர அரசால் அதை மூடி மறைக்க வடக்கு கிழக்குப்பகுதிகளில், அதிகளவு தமிழ் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருப்பது பொலிஷ் அதிகாரம் தமிழ் பொலிசாரை நியமிப்பதன் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக காட்டும் ஒரு செயலாக கூட இதை கருதலாம்.

இதேவேளை 34, வருடங்களாக மூடிக் கிடந்த யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரி யூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட வீதியே நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.எனினும் இன்னும் பல வீதிகள் திறக்கப்படாமலே உள்ளது.

பதவி நிலைகளில் பாதுகாப்பு தரப்பில் மாற்றங்கள் வந்தாலும் வழமையான கெடுபிடிகள் குறையவில்லை இப்போதும் புதிய வீதித்தடைகள் சில இடங்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டும் உள்ளது.

ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சிபீடம் ஏறிய தேசிய மக்கள்சக்தி அரசானது கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.அவர்களுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியிருப்பது சரியாகவே படுகிறது.

ஏற்கனவே தேர்தல் காலத்தில் கூறிய பல விடயங்களை இந்த அரசு செயல்படுத்தவில்லை மாறாக தொல்பொருள் ஆய்வு வேலைகளையும், கடந்த காலங்களில் வடகிழக்கில் இருந்து அவர்களுடைய பூர்வீக சிங்கள கிராமங்களில் குடியேறிய சிங்களவர்களை மீண்டும் வடகிழக் கில் குடியேற்றும் திட்டத்தை புதிய அரசு ஆரம்பித்துள்ளது, அதுபோல் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற் கொள்ள திட்டம் இட்டு திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கை தொடர்கிறது கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 01.01.2025 அன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் கடந்த (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 கி மீ வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லி யலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது?

அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்பட்டுள்ளதா?

எதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இவ்வாறான செயல்களை தட்டிக்கேட்கவும் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தி அரசால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஏழுபேருக்கும் முதுகெலும்பு இருப்பதாக தெரியவில்லை

யாழ்ப்பாணம் மாவட்டம்

  1. கருணானந்தன் இளங்குமாரன்
  2. சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜன்
  3. ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன்

வன்னி மாவட்டம்

  1. செல்வராசா திலகேஷ்வரன்
  2. மயில்வாகனம் ஜெகதீஷ்வரன்

மட்டக்களப்பு மாவட்டம்

  1. கந்தசாமி பிரபு

திருகோணமலை மாவட்டம்

  1. அருண் கேமச்சந்திரன்.

அரசின் பங்காளிகளான பாராளுமன்ற உறுப்பி னர்களும் மௌனமாகவே உள்ளனர்.