இலங்கையின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் தென் னாசியப் பிராந்தியத்தில் புதிய இராஜதந்திர மூலோ பாயக் கோலத்தை வரைந்துள்ள போதிலும், புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இருதரப்பு உறவில் காணப் படும் இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பீடமேறிய காலத்திலிருந்து, இந்தியாவிற்கு வழங்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாகக் காலங்கடத்தும் போக்கைக் கையாண்டு வருவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அடித்தளத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இரு நாடுகளினாலும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளமை புது டில்லியின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்திருக்கி றது.
கடந்த வாரம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ் தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி செயலகத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் நடத்திய அவசரச்சந்திப்பும், அதனைத் தொடர்ந்து நொடிப்பொழுதில் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி யின் விஜயமும், வெறுமனே வழமையான இராஜதந்திரச் சந்திப்புகள் அல்ல. மாறாக, இலங்கை அரசின் மெத்தனப் போக்கிற்கு எதிராக இந்தியா வெளிப்படுத்திய மிகக்கடு மையான எச்சரிக்கையும் ஆதங்கமுமேயாகும்.
புதுடில்லியின் பிராந்தியப் பாதுகாப்புக் கரிசனை களும், இலங்கை மண்ணில் அயல்நாடுகளின் அச்சுறுத்தல் பரவாமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களும் எப்போதுமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முதன்மையான இடத்தை வகிக்கின்றன.
2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக் கையில், இலங்கையின் நிலப்பரப்பு இந்தியாவின் பாது காப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது தீங்கு விளைவிக் கும் வகையிலோ பயன்படுத்தப்படாது என்ற வலுவான உத்தரவாதம் இலங்கைத் தலைமையினால் வழங்கப்பட்டிருந் தது.
இருப்பினும், அண்மைக் காலத்தில் சீன ஆய்வுக் கப்பல்களின் தொடர்ச்சியான நடமாட்டங்களும், பாகிஸ் தான் கடற்படையின் அதிநவீன ‘பி.என்.எஸ்.எம் ஹங்கோர்’ நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத்துறைமுகத்தில் நங்கூரமிட்டு வங்காள விரிகுடாவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தமையும் டில்லியை கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
இதற்குப் பதிலடியாக இந்திய கடற்படை ‘ஐ.என்.எஸ். ஐராவத்’ கப்பலை கொழும்புக்கு அனுப்பி தனது பலத்தைக் காட்சிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த இராஜதந்திரப் பின்னணியில் தான், இலங்கை மீண்டும் தனது வாக்குறுதியிலிருந்து விலகிவிடக் கூடாது என்பதை நினைவூட்ட விக்ரம் மிஸ்ரி கொழும்புக்கு வருகை தந்தார்.
ஆட்சி மாற்றத்திற்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான வாக்குறுதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை அநுர அரசிற்கு உணர்த்துவது புது டெல்லியின் உடனடித் தேவையாக இருந்தது.
இருப்பினும், தற்போதைய பிரதான முரண்பாட்டின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது அபிவிருத்தித் திட் டங்களில் இலங்கை அரசு காட்டி வரும் காலதாமதமும் அசமந்தப் போக்குமேயாகும். போர் முடிந்த பின்னரான கடந்த 17 ஆண்டுகளில் மாத்திரம் இந்தியா இலங்கைக்கு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இதில் 850 மில்லியன் டொலர் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத கொடையாகும். டித்வா புயல் பேரழிவின் போது கூட இந்தியா உடனடியாக ஓடிவந்து 450 மில்லியன் டொலர் நிவாரண பொதியை அறிவித்தது.
ஆனால், அநுர அரசாங்கம் இந்த உதவிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் காட்டி வரும் இழுபறி நிலைமை இந்தியாவின் ஆதங்கத்தை மேலும் அதிகரித்துள்ளது. 450மில்லியன் டொலர் நிவாரணப்பொதியில் உள்ள 350மில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு அதிகவட்டி அறவிடப்படுவதாகக் கூறி, அதை தட்டிக்கழித்து நிராகரிக்க இலங்கை அதிகாரிகள் முயன்ற செய்தி கசிந்தமை புதுடில்லியை ஆத்திரமடையச் செய்தது. இதன் விளைவாகவே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவசரமாக ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய சூழல் உருவானது.
காலங்காலமாக இந்தியாவுடனான அபிவிருத்தி உடன்பாடுகளில் இலங்கை காட்டி வரும் இழுபறி முறைமை அநுர அரசின் கீழும் எந்தவித மாற்றமுமின்றித் தொடர்வது டில்லிக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
திருகோணமலை சம்பூர் சூரிய சக்தி மின் திட்டம், காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம், பலாலி விமான நிலைய மேம்பாடு, தரைப்பாலம், குழாய் வழி எண்ணெய் விநியோகம், மின்சார இணைப்புத் திட்டம் மற்றும் திரு கோணமலை எரிபொருள் கேந்திரத் திட்டம் என்று இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவிருந்த பிரமாண்ட திட்டங்கள் அனைத்தும் நிர்வாகத் தடங்கல்கள் என்ற போர்வையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இத்திட்டங்களை விரைவாக அமுல்படுத்துவதாக முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது உறுதியளிக் கப்பட்ட போதிலும், அநுர அரசாங்கம் தனது அதிகாரத்துவ அமைப்புகளின் பின்னணியில் மறைந்துகொண்டு இத் திட்டங்களைத் திட்டமிட்டே தாமதப்படுத்தி வருகிறது என்ற வலுவான குற்றச்சாட்டு டில்லி தரப்பில் முன்வைக்கப் படுகிறது.
இலங்கை அரசின் இந்தத் தட்டிக்கழிக்கும் போக்கை முறியடிக்கும் நோக்கில், இந்தியத் தரப்பு முன்வைத்த யோசனை அநுர அரசாங்கத்திற்கு மிகப் பெரிய இராஜதந்திரப் பொறியாக மாறியுள்ளது. இந்திய நிதியுதவியுடனான திட்டங்களை கண்காணித்து அமுல் படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்திலேயே தனியான வொரு விசேட கண்காணிப்புப் பிரிவை நிறுவுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுவரை காலமும் தமக்குக் கீழ் இயங்கும் அமைச்சு களையும் அதிகாரிகளையும் காரணம் காட்டி தப்பித்து வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு, இந்த யோசனை பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் தனிப்பிரிவு அமைக் கப்பட்டால், திட்டத் தாமதங்களுக்கு ஜனாதிபதியும் அவரது நேரடியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டிவரும். இதனாலேயே, இந்த யோசனைக்கு உடனடியாக இணக்கம் தெரிவிக்க முடியாமல் அநுர அரசு தடுமாற ஆரம்பித்துள்ளது.
இதேநேரம், தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மாகாண சபைத்தேர்தல்கள் விவகாரத்திலும் அநுர அரசின் இரட்டை நிலைப்பாட்டை விக்ரம் மிஸ்ரியின் விஜயம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
12 ஆண்டுகளாகத் தள்ளிப்போயுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றும், 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்க லான அரசியலமைப்பு விதிகளை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் மிகத் தெளிவாக வலியுறுத்தினார்.
தமிழ் தேசியக் கட்சிகளுடனான சந்திப்பில், தேர் தலை நடத்த இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால், வெளி விவகார செயலருடனான ஜனாதிபதியின் சந்திப் பிற்குப் பிறகு 10மணிநேர தாமதத்துக்குப் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், மாகாண சபை தேர்தல் பற்றியோ அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகள் பற்றியோ இந்தியத் தரப்பு பேசியதாக வார்த்தை கூட இடம்பெறவில்லை. இந்தியாவின் கோரிக்கைகளை இலங்கை அரசு சாதகமாகக் கருதவில்லை என்பதையும், அதனை நாகரீகமாக மறைக்க முயற்சிப்பதையும் இந்த அறிக்கை முரண்பாடு தெளிவாகக் காட்டுகிறது.
இந்தியாவின் அதிருப்திக்கு மற்றுமொரு முக்கிய காரணம், அநுர அரசின் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளில் காணப்படும் நம்பிக்கையின்மையாகும். தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, இந்தியத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமது தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்றும், தொடர்பு அதிகாரிகளை நியமிப்பது போன்ற சூசகமான சாக்குப்போக்குகளைக் கூறி இலங்கை அரசாங்கமே இத்திட்டங்களைத் தட்டிக்கழித்து வருவதாகவும் விக்ரம் மிஸ்ரி பகிரங்கமாகவே தனது ஆதங் கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் மிக வும் அரிதாக நிகழும் ஒரு நிகழ்வாகும். அநுர அரசு புதுடெல்லியிடம் ஒரு முகத்தையும், உள்நாட்டு அரசியலிலும் பிற வெளிநாட்டுப் பங்காளிகளிடம் வேறு முகத்தையும் காட்டி வருவதை இந்தியா நுட்பமாகக் அவதானித்து வருகின்றது.
இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதார மறுசீர மைப்பு மற்றும் பிராந்திய வர்த்தக விரிவாக்கம் ஆகிய இரண்டிலுமே இந்திய முதலீடுகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருப்பினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இடதுசாரி மற்றும் தேசியவாத ஆதரவுத்தளத்தை திருப்திப்படுத்துவதற்காக, இந்தியாவுடனான மூலோபாயத் திட்டங்களை வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல், அதேநேரத்தில் அவற்றை வேகமாகச் செயல்படுத்தவும் விருப்பமில்லாமல் முட்டுச்சந்துக்குள் சிக்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம், பல்துறை எரிபொருள் உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற மிக முக்கியமான திட்டங்களில் இலங்கை அரசு காட்டும் மெத்தனப் போக்கு, சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் தவறான சமிக்ஞையை அனுப்பி வைக்கிறது. பிராந்திய வல்லரசுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அமுல் படுத்தாமல் காலம் தாழ்த்துவது, இலங்கையின் நம்பகத்தன் மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தென்னாசியப் பிராந்தியத்தில் தனது பிராந்தியப் பாதுகாப்பையும் மூலோ பாய நலன்களையும் பாதுகாப்பது முதன்மையான இலக் காகும். குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிற வெளிநாட்டுச் சக்திகளின் ஊடுருவலைத் தடுப்பதில் இலங்கையின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது.
ஆனால், அநுர அரசாங்கம் புதுடெல்லியின் பாது காப்புக் கரிசனைகளை வெறும் வார்த்தை அளவிலான வாக்குறுதிகளோடு முடித்துக் கொள்ள முற்படுவதை இந் தியா இனிமேலும் அனுமதிக்கத் தயாராக இல்லை. விக்ரம் மிஸ்ரியின் அதிரடி விஜயமும், தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடனான தனியான சந்திப்புகளும் இலங்கை அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட தெளிவான இராஜதந்திர அழுத்தங்களாகும்.
இலங்கை அரசு தனது வாக்குறுதிகளைக் காப்பாற் றத் தவறினால், புதுடில்லி தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார வழிகளிலான அழுத்தங்களை மேலும் தீவிர மாக்கும் என்பதில் ஐயமில்லை.
அதுமட்டுமன்றி, பொருளாதார நெருக்கடியிலிரு ந்து மீண்டு வர இந்திய உதவிகளைப் பெற்றுக்கொண்டு, அதேவேளையில் இந்தியாவின் மூலோபாய நன்மை களையும் அபிவிருத்தி உடன்பாடுகளையும் கிடப்பில் போடும் அநுர அரசின் உத்தி இனிப்பலிக்காது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பேணுவது மற்றும் இந்தியத் திட்டங் களை துரிதப்படுத்துவது ஆகிய விடயங்களில் இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.



