செப்ரெம்பர் 20ம் திகதி, அஸர்பைஜான் துருப்புகளிடம் நாகோர்ணோ- கரபாக் (Nagorno – Karabakh) பிரதேசம் சரணடைந்த நாளிலிருந்து, ஆர்மீனியன் (Armenian) இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.அஸர்பைஜான் (Azerbaijan) இராணுவத்தினர், நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தின் மீது ஒரு இராணுவத் தாக்குதலை ஆரம்பித்ததும், இரு தரப்புத் துருப்புகளிடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தாம் தமது ஆயுதங்களைக் களைவதாகவும் தமது இராணுவக் கட்டமைப்பைக் கலைப்பதாகவும் நாகோர்ணோ பிரதேசத்தைச் சேர்ந்த படைவீரர்கள் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.
”அஸர்பைஜானிலிருந்து பிரிந்திருந்த நாகோர்ணோ கரபாக் குடியரசும் அது சார்ந்த அனைத்து நிறுவனங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து செயலிழக்கும்” என்று அந்த பிரதேசத்தின் தலைவர் அறிவித்திருக்கிறார்.குறிப்பிட்ட அந்தப் பிரதேசம் அஜர்பைஜானின் ஒரு பகுதியாகவே பன்னாட்டுச் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆர்மீனியன் இனத்தைச் சேர்ந்தவர்களே இப்பிரதேசத்தின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.உலகில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் மோதல்களில் இதுவும் ஒன்றாகும்நாகோர்ணோ கரபாக் எங்கே இருக்கிறது?கருங்கடலுக்கும் கஸ்பியன் கடலுக்கும் இடையே காணப்படுகின்ற தென் கோக்கஸஸ் மலைப்பிரதேசத்தில் நாகோர்ணோ கரபாக் பிரதேசம் அமைந்திருக்கிறது.நாகோர்ணோ கரபாக் பிரச்சினை தொடர்பாக, அஸர்பைஜானும் ஆர்மீனியாவும் எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் தமக்கு இடையே மிகவும் கடுமையாகப் போரிட்டிருந்தன. அதற்குப் பின்னரும் இந்த நாடுகளுக்கு இடையே கடுமையான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன.2020ம் ஆண்டு, ஆறுவாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற மிகவும் கடுமையான போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட அமைதிப்படையினரின் வருகையோடு, குறிப்பிட்ட போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற தாக்குதல் தொடங்க முன்னர் பல மாதங்களாக இப்பிரச்சினை கொதிநிலையிலேயே இருந்து வந்தது.தற்போது நடைபெற்ற மோதலுக்கான காரணம் என்ன?2022 டிசம்பரில், குறிப்பிட்ட பிரதேசத்துக்குச் செல்லும் மிகவும் முக்கியமான பாதையை அஜர்பைஜான் தடுத்ததைத் தொடர்ந்து, அங்கு மோதல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தையும் ஆர்மீனியக் குடியரசையும் இணைக்கின்ற ஒரேயொரு பாதையாக லச்சின் ஓடை மட்டுமே இதுவரை இருந்துவந்தது.
நாகோர்ணோ கரபாக் பிரதேசத்துக்குரிய மிகவும் முக்கிய விநியோகப் பாதையாக லச்சின் ஓடை இருந்து வந்ததன் காரணத்தினால், பாதை தடைசெய்யப்பட்ட போது, அடிப்படை உணவு மற்றும் மருந்துகளுக்கு குறிப்பிட்ட பிரதேசத்தில் மிகவும் மோசமான தட்டுப்பாடு ஏற்பட்டது.இராணுவ விநியோகங்களுக்குக் குறிப்பிட்ட பாதையை ஆர்மீனியா பயன்படுத்தி வருவதாக அஸர்பைஜான் குற்றஞ்சாட்டியது. ஆர்மீனியாவோ அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது. வேறொரு பாதை வழியாக உணவையும் வேறு உதவிகளையும் வழங்கத் தாங்கள் முன்வந்ததாகவும் அதனை நாகோர்ணோ கரபாக் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அஸர்பைஜானின் தலைநகரமான பாக்கு (Baku) தெரிவித்தது.லச்சீன் பாதையையும் அஸர்பைஜானிலிருந்து வருகின்ற அக்டாம் பாதையைப் பயன்படுத்தவும் இதுவரை ரஷ்யாவைச் சேர்ந்த அமைதிகாக்கும் படையினரே உதவி வந்தார்கள்.ஆனால் பின்னர் மொஸ்கோவின் கவனமும் வளங்களும் உக்ரேனை ஆக்கிரமிப்பதில் குவிமையப்படுத்தப்பட்டன.நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தைத் தாங்களாகவே கைவிட்டுச் செல்வதாக ஆர்மீனியப் பிரதம மந்திரி ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டியிருந்தார்.தமது தரப்பில் 200 பேர் கொல்லப்பட்டதாக கரபாக் அதிகாரிகள் தெரிவித்திருக்கும் அதே நேரம், தங்கள் தரப்பில் 192 பேர் கொல்லப்பட்டதாக அஸர்பைஜான் தெரிவித்திருக்கிறது.மக்கள் வெளியேறுவதற்கான காரணம் என்ன?
செப்ரெம்பர் 20ம் திகதி, ரஷ்யா மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, நாகோர்ணோ கரபாக் பிரதேசத்திலுள்ள ஆர்மீனியன் இனத்தவர்களும் அஸர்பைஜானும் ஓர் போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் நீடித்த போர் ஒரு முடிவுக்கு வந்தது.நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தில் உள்ள ஆர்மீனியன் இனத்தைச் சார்ந்த இராணுவ வீரர்கள், தங்கள் ஆயுதங்களை முழுமையாகக் களைவதாகவும், தமது இராணுவ அமைப்புகளைக் கலைப்பதாகவும் ஒப்பந்தத்தில் உடன்பாடு தெரிவித்திருந்தார்கள். குறிப்பிட்ட பிரதேசத்தை அஸர்பைஜானுக்குள் உள்வாங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.சமகாலத்தில் இப்பிரதேசத்தின் பிரிவினைத் தலைவரான சாம்வேல் சஹ்றமான்யன் அடுத்த வருடத் தொடக்கத்திலிருந்து தமது அரசுக்குரிய அனைத்து நிறுவன அமைப்புகளையும் கலைப்பதாக அறிவித்திருக்கிறார். இவ்வாறு நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தின் சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.
”தமது மக்களின் பாதுகாப்பையும் தமது மக்களின் முக்கிய தேவைகளையும் கருத்திற் கொண்டே அரசைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று சஹ்றமான்யன் தெரிவித்தார். சுதந்திரமாக, தன்னார்வமாக, எந்தவொரு தடையுமின்றி மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அஸர்பைஜான் சம்மதம் தெரிவித்திருந்தது.நாகோர்ணோ கரபாக் அஸர்பைஜானிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.போர்நிறுத்த ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்ட ஒரு வாரத்தில், நாகோர்ணோ கரபாக்கில் தமக்கு எந்தவித எதிர்காலமும் இல்லை என்று கருதி, ஒரு இலட்சத்து இருபதினாயிரம் சனத்தொகையைக் கொண்ட ஆர்மீனியன் மக்களில் அரைவாசிப்பேர் குறிப்பிட்ட பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த மக்களது பேருந்துகளாலும் மகிழுந்துகளாலும் லச்சீன் ஓடை நிறைந்திருந்தது.”நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியர்கள் எவரும் எதிர்காலத்தில் இருக்க மாட்டார்கள்” என்று ஆர்மீனியாவின் பிரதம மந்திரியான நிக்கோல் பஷின்யன் (Nikol Bashinyan) தெரிவித்திருக்கிறார்.இனச்சுத்திகரிப்பு நடைபெறுவதாக ஆர்மீனியாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுதலித்த அஸர்பைஜான், ஆர்மீனிய மக்களைச் சமமாக நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது.பல தசாப்தங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த மோதல்களின் காரணமாக குறிப்பிட்ட பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்த அஸர்பைஜான் மக்கள், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் கருத்துத்தெரிவித்தார்.குறிப்பிட்ட இரு நாடுகளும் எந்தவித அமைதி ஒப்பந்தத்திலும் இதுவரை கைச்சாத்திடவில்லை என்பது மட்டுமன்றி, பல வருடங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் இருநாடுகளுக்கும் இடையே எந்தவித இராஜீக உறவுகளும் இருக்கவில்லை.போருக்கு இட்டுச்சென்ற காரணிகள் எவை?
அஸர்பைஜான் தாம் இழந்த பிரதேசங்களை மீளவும் கைப்பற்றியது. 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவின் துணையுடன் சமாதான ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்ட போது, 1994ம் ஆண்டில் அஸர்பைஜான் இழந்த நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து நகரங்களையும் அஸர்பைஜான் மீட்டுக்கொண்டது.அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்தப் பிரதேசங்களிலிருந்து ஆர்மீனியா வெளியேற வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தின் மிகவும் குறுகிய பகுதியையே ஆர்மீனிய படைகள் தம் வசம் வைத்திருந்தன.ரஷ்யாவினதும் துருக்கியினதும் ஆதரவு யாருக்கு?


