யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம்

யாழ்ப்பாணம் மாவட் டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட் டாரங்கள் சுட்டிக்காட் டின. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் மாத்தி ரமே 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவினரே அதிகம். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையானவர்கள். இவர்களில் உயிர் கொல்லி ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர். இவை மூன்றையும் பயன்படுத்துவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போதைப் பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப் பட்டவர்களில் அதிகமானவர்கள் மூக்கு மூலமாக நுகர்கின்றனர். அதற்கு அடுத்த படியாக ஊசி மூலம் அதனை நுகர்கின்றனர். உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டு உயிரிழக்கின்றமையும் யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 15 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.