கடந்து செல்லும் 22 உம் பிறக்கவுள்ள 23 உம்- பி.மாணிக்கவாசகம்

113 Views

இராணுவ மயமான ஆட்சி நிர்வாகப் போக்கில் மூழ்கியிருந்த நாடு நம்பிக்கையற்ற நிலையிலேயே 2022 ஆம் ஆண்டில் பிரவேசித்திருந்தது. அப்போது ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அறிகுறிகள் எதுவுமே அற்றதொரு நிலைமையே நிலவியது. ஆனால் புதிய ஆண்டில் பிரவேசித்ததன் பின்னர் சென்ற ஆண்டின் நடுப்பகுதியில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன. பெரும் அதிகாரப் பலத்துடன் செயற்பட்டிருந்த ஆட்சியாளர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

நிறைவேற்றதிகார வல்லமையைக் கொண்டிருந்த ஜனாதிபதி நாட்டைவிட்டு, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் தப்பியோடினார். தலைமறைவாகி இருந்த நிலையிலேயே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் நாட்டின் அரசியலில் மக்கள் போராட்டம் (அரகலய) என்ற பூகம்பம் வெடித்திருந்ததே இதற்குக் காரணம். இராணுவ போக்கிலான ஆட்சியில் பொருளாதாரத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் கருத்திற் கொள்ளாத ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கு நாட்டில் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருந்தது. பொருளாதாரச் சுமையையும் அதன் நெருக்குதல் வெம்மையையும் தாங்க முடியாத மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

தன்னெழுச்சி பெற்ற இலட்சக்கணக்கிலான மக்கள் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடியமை இலங்கையின் அரசியலில் பேராபத்தான அனுபவமாக முகிழ்த்திருந்தது. மக்களைத் தமது அதிகாரப் பலத்தின் மூலம் அடக்கி ஆண்டு பழக்கப்பட்டிருந்த ஆட்சியாளர்களுக்கு மக்களின் பேரெதிர்ப்பு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த அச்சத்தின் விளைவாகவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலை தப்பினாற்போதும் என்ற நிலையில் நாட்டைவிட்டோடினார்.

குட்டக்குட்ட குனிபவர்கள் எல்லா காலமும் குனிந்து கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்கும்  சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கும் தன்னெழுச்சி பெற்ற மக்களின் போராட்டம் சிறந்த உதாரணமாக அமைந்துவிட்டது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் இராணுவ போக்கிலான சிவில் நிர்வாகச் செயற்பாடும் எதேச்சதிகாரப் போக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதாளத்தில் கொண்டு வீழ்த்தியிருந்தது. அதன் விளைவாகக் கொதித்தெழுந்த (அரகலய) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வெறுமனே ஆட்சி மாற்றத்தைக் கோரவில்லை. ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டு மொத்தமாக அனைவரும் பதவி துறக்க வேண்டும் என்று கோரி போராடினார்கள்.

இந்தப் போராட்டம் வெறுமனே கூச்சல் கோசங்களுடன் கூடிய பேரணியாக மட்டுமல்லாமல் ஜனாதிபதி செயலகம், பிரதமருடைய செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பவற்றில் கோபாவேசத்துடன் பிரவேசிக்கின்ற அளவுக்குத் தார்மீகக் கோபத்த்தைக் கொண்டிருந்தது. அடுத்த கட்டமாக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளே பிரவேசிப்பதற்கான நிலைமையும் உருவாகியிருந்தது. ஆயினும் கடைசி நேரத்தில் அது நடைபெறவில்லை. தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் விளைவாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்து உயிருக்கு அஞ்சி ஒளிந்து வாழும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். நாட்டின் தலைமைகளில் ஏற்பட்டிருந்த மாற்றத்தினால் நாட்டின் ஆட்சி பீடம் வெலவெலத்து கலங்கிப் போயிருந்தது. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகினார். தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவின் மூலம் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வழிமுறைகளில் கவனக்குவிப்பு செய்யாமல் இராணுவ வழியில் தீர்வு காண முற்பட்டதன் விளைவாக நாடு பெரும் கடன் சுமைக்கு ஆளாகியது. பெற்ற கடன்களைச் செலுத்த முடியவில்லை. நாட்டின் உற்பத்தித்துறைகளை சாதுரியமாக முன்னேற்ற அரசுகள் தவறின. போர் வெற்றியை மூலதனமாகக் கொண்டு அரசியலில் பிரவேசித்த போர்க்கால பாதுகாப்புத்துறையின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச இராணுவ வழிமுறையிலான  நிர்வாகத்தை சிவில் நிர்வாகத்தில் புகுத்த முயன்றார். எதேச்சதிகாரமாக முடிவுகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிப்பதற்குக் காரணமானார். ஊழல்களையும் இலஞ்சம் மோசடிகளையும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இனத்துவேசத்தையும் மதவெறிப்போக்கையும் முனைப்பாகக் கொண்டு செயற்பட்ட அவரை, ஜனாதிபதவிக்குக் கொண்டு வந்த சிங்கள பௌத்த மக்களே ஒன்று திரண்டு எதிர்த்து ஆட்சிக் கட்டிலைக் கைவிட்டுக் களவாக ஓடித் தப்பச் செய்தனர். ஆட்சி மாற்றத்தின் மூலம் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கையில் கவசமாகக் கொண்டு அடக்கி ஒடுக்கினார். போராட்டதில் (அரகலய) ஈடுபட்டவர்களைத் வீதிகளிலும் வீடுகளிலும் தேடித்தேடி வேட்டையாடினார்.

நாட்டின் பொருளாதாரத்தைத் தட்டி நிமிர்த்துவதே தனது தலையாய அரசியல் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பு என சூளுரைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் செய்ய முடியும் என்று நம்பினார். பிறரையும் நம்பச் செய்தார். ஆனாலும் அவர் எதிர்பார்த்தவாறு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த முயற்சி 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நிலைமையிலேயே தள்ளாடிக்கொண்டிருக்கின்றது.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு நொடித்துப் போன அரசியலை நிமிர்த்தி வலுவாக்க அவரால் முடியவில்லை. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் பதவி விலகலைத் தொடர்ந்து ஜனநாயக வழிமுறையில் நாட்டின் அரசியல் ஸ்திரப்படுத்தப்படவில்லை. இதனால் நாட்டின் அரசியல் உறுதியற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்திலும் தள்ளாடிக்கொண்டிருப்பதையே காண முடிகின்றது.

உறுதியற்று நசிந்து நலிந்துபோன அரசியலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வலுவாக்கி உறுதிப்படுத்த முடியவில்லை. மாறாகத் தனது ஜனாதிபதி பதவியை நீடித்துக் கொள்வதிலும், தனது ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்தி மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்குள்ளதாக மாற்றியமைப்பதிலும் கூடிய கவனம் செலுத்துகின்ற போக்கையே காண முடிகின்றது.

சட்ட ரீதியாக அவர் ஜனாதிபதி பதவியைப் பெற்றிருந்தாலும் செல்வாக்குள்ள – மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஜனாதிபதியாக அவர் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படவில்லை என்ற ஜனநாயக வழிமுறையிலமைந்த சட்டரீதியான பலவீனம் – குறைபாட்டையே அவர் கொண்டிருக்கின்றார். ஆயினும் நிறைவேற்று அதிகாரம் என்ற ஒரேயொரு அதிகார பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பது, அரசியலை ஸ்திரப்படுத்துவது, பாதிப்புக்கும் நம்பிக்கையற்ற தன்மைக்கும் ஆளாகியுள்ள சிறுபான்மை இன மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது என்று அரசியலில் அவர் அகலக் கால் பதித்திருப்பதையே காண முடிகின்றது.

அது மட்டுமல்லாமல் காலந்தாழ்த்தப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முற்பட்டிருப்பதையும், அதேவேளை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதிலும் நாட்டம் கொண்டவராகவும் ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் காய்ச்சலுடனேயே புதிய ஆண்டாகிய 2023 இல் காலடி எடுத்து வைப்பதைக் காண முடிகின்றது.

கிட்டத்தட்ட அரையாண்டு கால ஆட்சிப் பொறுப்பில் நாட்டு மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்தி நம்பிக்கை கொள்ளத்தக்க வகையில் பல்வேறு புதிய திட்டங்களைப் பிரகடனப்படுத்தி புதிய ஆண்டில் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற நோக்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் கால் பதிக்க முற்பட்டிருக்கின்றார்.

ஆனால் மக்களைப் பொறுத்தமட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து சிறிதளவு மீண்டிருந்தாலும், உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரித்த வாழ்க்கைச் செலவு, அளவுக்கு மிஞ்சிய பணவீக்கம், வாழ்வதாரத்துக்கு அவசியமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை என்பவற்றுக்கு மத்தியில்  போதைப்பொருளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி இம்சை, நொடித்துக் கொண்டிருக்கின்ற அரசியல் நிலைமை என்பற்றினாலும் ஒரு நம்பிக்கையற்ற குழப்பகரமான நிலையிலேயே புதிய ஆண்டாகிய 2023 ஆம் ஆண்டை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வுக்கான ஒற்றுமையின்றியும், தேர்தல்களை எதிர்கொள்வதற்கான தற்துணிவான சூசகச் செயற்பாடுகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைமையையும் வழிநடத்தலையுமே தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல்வாதிகளின் இந்த நிலைப்பாட்டினால் நம்பிக்கையற்றிருந்த போதிலும், புதிய ஆண்டில் பிரச்சினைகள் தீரும் எல்லாமே நன்மையாக நடக்கும் என்ற சம்பிரதாயபூர்வ எதிர்பார்ப்பையே கொண்டுள்ளார்கள்.

Leave a Reply