உலகக்கோப்பை நிகழ்வுக்காக கட்டாரில் மரணமடைந்த 500 பணியாளர்கள்

கட்டாரில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டம் இடம்பெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த நிகழ்வை மேற்கொள்வதற்காக கட்டார் அரசு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்த பணியாளர்கள் 400 தொடக்கம் 500 பேர் வரையில் மரணமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு நீதியும் இழப்பீடும் கிடைக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்துள்ளது.

400 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதை கட்டார் நாட்டின் உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டி நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் அல் தவாடி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வுக்காக விளையாட்டு மைதானங்கள், வீதிகள், தொடரூந்து பாதைகள், ஆடம்பர விடுதிகள் மற்றும் அனைத்துலக விமானநிலையத்தின் விஸ்த்தரிப்பு என கட்டுமானப்பணிகளுக்காக கட்டார் அரசு 300 பில்லியன் டொலர்களை செலவிட்டிருந்தது.

பல ஆயிரம் வெளிநாட்டு பணியாளர்கள் மரணமடைந்திருக்கலாம் எனவும், அது தொடர்பில் தாம் தற்போதும் விவாதங்களை மேற்கொண்டு வருவதாகவும் மன்னிப்புச்சபையின் பிரதிநிதி Steve Cockburn தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட த கார்டியன் பத்திரிக்கையின் தகவல்களின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், நேபாளம் மற்றும் இலங்கையை சேர்ந்த 6500 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் மற்றும் தரமற்ற பணியிடங்களே இந்த மரணங்களுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.