இலங்கையில் 50 வீதமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 50 வீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான உப குழு குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் கூடியது.

அண்மையில் வெளியிடப்பட்ட குடும்ப நல பணியகத்தின் தகவல்களுக்கு அமைய, கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை குறியீட்டெண் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர்கள் மட்டத்தில் முன்னுரிமைகள் இனங்காணப்பட்டு, இது தொடர்பான தீர்வுகள் காணப்பட வேண்டும் என குறித்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உப குழுவின் முதலாவது அறிக்கையில், மின்சாரப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது தொடர்பான முன்மொழிவொன்றை  வைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சுமார் 80 வீத பெண்கள் ஆடைத் தொழிற்துறையில் பணிபுரிவதுடன்,  இந்த தொழில்துறையில் உள்ள பலர் வறுமையான சூழலை எதிர்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.