38வது மாவீரர் நாளில் இறைமையின் மீளுறுதியே அவர்கள் கனவென்பதால் அதனை நனவாக்க சில சிந்தனைகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 417

இன்று 21.11.2026 இல் வெளிவரும் இலக்கு மின்னிதழும் தாயகத்திலும் அனைத்துலகிலும் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஆரம்பமாகியுள்ள மாவீரர் வாரத்தில் இணைவதுடன் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
இந்நேரத்தில் அனைத்துலகத்துக்கு நல்ல பெயரைக் காட்டுவதற்கு ஒரு அறிக்கையும் மறுபுறத்தில் நினைவுகூரலைத் தடுப்பதற்கு விசாரணைகளையும் ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டு வருகிற உண்மையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.
வரிச்சீருடையுள்ள அல்லது சிறிலங்கா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அடையாளங்களைக் கொண்ட புகைப்படங்கள் எதற்காவது இவர் அஞ்சலி செய்தாரா என இவரை 20.11.2026 இல் கொழும்பில் இருந்து வந்த கட்டளையின் கீழ் பொலிசார் ஒன்றரை மணி நேரம் விசாரணை செய்துள்ளனர்.
10.10.2026 தமிழீழ மகளிர் நாள் அன்றும் இவரை சிறிலங்காப் பொலிசார் இவ்வாறு விசாரணை செய்துள்ளனர். தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலையை அகற்றிய விடயத்திலும் இவரை பொலிசார் விசாரணை செய்துள்ளனர்.
மாற்றம், நல்லிணக்கம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசுகின்ற சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவின் அரசாங்கம் வீரச்சாவடைந்தவர்களை நினைவேந்தல் செய்வதைக் கூட அனுமதியாத சிங்கள பௌத்த பேரினவாத அரசாகவே செயலளவிலேயே செயற்படுகின்றது என்பதே உண்மை.
இவ்வாறு இன்றும் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் தொடர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள், அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுவதை உலகெங்கும் உலகத் தமிழினமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தமது நகராட்சி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துலக மக்களின் கவனத்தைச் சிறிலங்காவில் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே ஈழத்தமிழர்கள் உள்ளனர் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும் என்பது இலக்கின் இம்மாவீர வார அழைப்பாகவுள்ளது.
இந்த ஈழத்தமிழர் மேலான இனஅழிப்பு நோக்கிலான சிறிலங்காவின் இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு செயற்பாடுகளிலிருந்து இருந்து தங்களின் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கவே மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்து வீரச்சாவினை அடைந்தனர் என்ற வரலாற்று உண்மை உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் பலமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஈழத்தமிழர்களின் உள்ளகத் தன்னாட்சி உரிமை சிறிலங்காவால் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிராக மறுக்கப்பட்டு வருவதால் அவர்களது வெளியகத் தன்னாட்சி உரிமையைக் கொண்டு உலக மக்களிடமும் உலக நாடுகளிடமும் தாங்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் வகையில் தங்களுடைய தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும் என்பது இலக்கின் இந்த மாவீர வார அடுத்த கருத்தாகவுள்ளது.
உலகில் உரையாடல்கள் மூலமான அரசியல் பேச்சுக்கள் வழியில்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பது, உலக வரலாற்றிலேயே முதன் முதலாக சீனாவில் ஷென் ஸென் நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு 2026இன் நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை பன்முகத்தன்மை கொண்டதாக இன்று மாறிவிட்டது என்ற உண்மையை வெளிப்படுத்தும் வகையில் சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் இடையே நடைபெற்ற முத்தரப்பு உச்சிமாநாடு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் சிறிலங்காவின் அநுரகுமார திசநாயக்காவோ ஈழத்தமிழர்களுடைய தேசியப் பிரச்சினையான பிரித்தானிய காலனித்துவ அரசிடம் 1796 முதல் 1948 வரை இருந்த தங்களின் இறைமையை மீளவும் உறுதிப்படுத்தல் என்பது குறித்த எந்தவொரு உரையாடலையும் தொடங்க மனதில்லாது, மாறாகத் தமது படைபலத்தின் வழி இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெற 70 ஆண்டுகளாக முயன்று வரும் அதே பாணியிலேயே செயற்படுவதை உலகிற்குத் தெளிவாக்கும் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு உள்ளது என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
கடந்த வாரத்தில் யேர்மனியின் பிரபலமான ஊடகவியலாளர் Klaus Brinkbäumer பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் 20.11.2026 இல் இடம்பெற்ற உச்சிமாநாட்டில்,
01. இளையவர்களுக்கு பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான விசா அனுமதி; 02. பிரித்தானிய, ஐரோப்பிய உணவுப் பொருள்களுக்கு சோதனைத் தடைகள் நீக்கம்;
03. காபனீரொட்சைடு வெளியேற்றத்தைக் குறித்த அளவில் கட்டுப்படுத்திக் காலநிலைச் சீர்கேட்டைக் குறைத்தல்
என்பனவற்றில் இருதரப்பினருக்கும் இடையில் பொதுத்தன்மை அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து மகிழ்வுடன் “பிரிக்சிட்டைத் தந்தீர்கள் – பின்னர் பிரிகிறீட் எனக் கவலைப்பட்டீர்கள்; தயவுசெய்து பிரிரிவேர்ஸ் என மீளவும் பின்னோக்கி வாருங்கள்; பிரிரிட்டேன் எனத் தயவுசெய்து மீளவும் முற்றாகத் திரும்பி வாருங்கள்” (You gave us Brexit, then Bregret; can we please let Breverse lead to Breturn?) என அழைப்பு விடுத்தார்.
இந்த நிலைக்கான, அதாவது பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்துள் திரும்பவும் இணைவதற்கான முதற்படியாக இந்த மூன்று விடயங்களிலும் ஏற்பட்ட இணைப்பைக் கருதும் ஆய்வாளர்கள், பிரித்தானியப் பிரதமர் அன்ரி பேர்ணன் அவர்களின் சிரித்துச் சிரித்துப் பேசி விடயத்தை வெற்றி-வெற்றி என்ற வகையில் இருதரப்பினருக்கும் இடையில் முன்னெடுக்கும் ஆற்றல் எனவும் விமர்சித்துள்ளனர்.
இதனைப் பிரித்தானியப் பிரதமர் பல எதிர்ப்புக்களுக்கு இடையில் முன்னெடுப்பதற்கான காரணம், 32 வயதுக்கு உட்பட்ட ஜென்சி இளைய தலைமுறையினரின் ஆங்கிலத்தில் NEET (No Education, Employment, Training) கல்வியில்லா நிலை, வேலையில்லா நிலை, பயிற்சிகள் இல்லா நிலை ஆகியவற்றை 2030க்குள் அரை வாசியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே.
பிரிக்சிட் நடந்த 2016 முதல் இன்றைக்கு மட்டுமான பத்தாண்டுகளுள் உலகம் எங்கோ சென்றுவிட்டது என்பது பிரதமரின் கருத்து; அதற்கேற்ப மாற்றத்தைக் கொண்டுவர முயல்கின்றார். இதனை இலங்கையின் அரசியல்வாதிகளும் கவனத்தில் எடுத்து, ஆயுதப் போராட்டம் மௌனித்து 17 ஆண்டுகள் சென்றுவிட்டன.
அதற்கேற்ப காலத்துக்கு ஏற்ற செயற்திட்டங்களை வகுக்க வேண்டுமென்பதை வலியுறுத்து வதற்காகவே, அதிலும் குறிப்பாக ஈழத்தமிழரின் ஜென்சி பரம்பரையினர் உள்வாங்கப்பட்டு அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் அனுமதிக்கப்பட்ட அரசியல் முறைமையொன்றை உருவாக்கி இதனைச் செய்தல் வேண்டும் என்பது இலக்கின் எண்ணம்.
அவ்வாறே யேர்மனியின் அழைப்பின் பேரில் பிரித்தானியாவையும் இணைத்த ஐரோப்பிய நாடுகளின் அமைப்பான “விருப்பின் கூட்டாண்மை” என்ற உக்ரேனுக்கு உதவும் விருப்புடைய நாடுகளின் தலைவர்களின் கூட்டமும் யேர்மனியில் நடைபெற்றது.
இதில் பிரான்சின் அதிபர் மக்கரோன் உக்ரேனுக்கான நேட்டோ குறித்துப் பேசியுள்ளார். இதில் அமெரிக்க அதிபரின் மருமகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் காலத்துக்கு ஏற்ப செயற்படல் என்பது இன்றைய உலக அரசியலாக உள்ளதென்பதை உறுதியாக்குகின்றன.
இந்நிலையில் ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்வதில் விருப்புள்ளவர்களின் கூட்டாண்மை ஒன்றை ஈழத்தமிழர்கள் தங்களிடையுள்ள விருப்பு வெறுப்புகளை அனுமதித்த நிலையில், இந்தப் பொதுவிருப்பில் இணைதல் என்ற நிலையில் உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தல் வழியாகவே மாவீரர்களின் கனவுகள் நனவாக முடியும்.
   ஆசிரியர்

Tamil News
சிறிலங்காவின் பொருளாதார உறுதித்தன்மையென ஈழத்தமிழர் இறைமை நீக்க தேசிய நீக்க வரவுசெலவுத்திட்டம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 417

Ilakku Weekly ePaper 417 | இலக்கு-இதழ்-417 | சனி, 14 நவம்பர், 2026