இராணுவ முகாமிலிருந்து பாதாளக் குழுவின் வசம் சென்ற 73 துப்பாக்கிகளில் 38 மீட்பு – ஜனாதிபதி அநுரகுமார பரபரப்பு தகவல்

“இராணுவ முகாம்களில் உள்ள சில ஆயுதங்கள் பாதாளக் குழுக்களின் வசம் சென்றுள்ளன. இந்த குழுக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களும், இராணுவத்துக்குள் வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

பாதாளக் குழுக்களின் செயல்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கர் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார்.

“பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட காவல்துறையினரின் தலையீட்டுடன், இலங்கையின் வரலாற்றில் அதிகளவான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. பணம் மற்றும் ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றன” என்றும் ஜனாதிபதி கூறினாா்.

“நாட்டின் பயங்கரமான நிலையைப் பற்றிய தகவலை வெளியிடுகிறேன். இராணுவ முகாம்களில் உள்ள ஆயுதங்கள் வெளியே வந்துள்ளன. குறிப்பாக, இராணுவ முகாமொன்றிலிருந்து 73 ரி-56 துப்பாக்கிகள் பாதாளக் குழுக்களின் வசம் சென்றுள்ளன. அவற்றில் 38 ஐ நாம் மீட்கக் கூடியுள்ளோம். மீதமுள்ள 35 ஐ தேடி வருகின்றோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தாாா். “இராணுவத்தில் சிறப்பாக செயல்படும் புகழ்பெற்ற அதிகாரிகளும், பாதாளக் குழுக்களுக்காக பணியாற்றும் சிலரும் இருக்கின்றனர். அவர்கள் பாதாளக் குழுக்களிடமிருந்து பணம் பெற்றுவிட்டு, சூடு நடத்தி, இராணுவ முகாம்களில் சென்று செயல்படுகின்றனர். இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தாா்.