உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

அன்றய வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (North-East Secretariat on Human Rights – NESoHR ) முக்கிய உறுப்பினரும், தாயகத்தில் பெண்கள் முன்னேற்றச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் தமிழர் உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான கலாநிதி. ந. மாலதி அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி – முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றைய நிலையில் நீதி வழங்கப்படுவது, தமிழர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவது தொடர்பில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் – முன்னேற்றம் போன்ற சில தோற்றப்பாடுகளை ஐநா மனித உரிமை கவுன்சில் காட்டி வருகிறது. நாமும் அத்தோற்றப்பாடுகளை பார்த்து ஏமாந்து வருகிறோம் என்பது தான் உண்மை. இந்த ஐநா மனிதவுரிமை கவுன்சில் செயற்பாடுகள் நீர்ச்சுழல் போன்று அபாயமானது. ஈழத்தமிழர்களை உள்ளிழுத்து அவர்களின் வளங்களையும் சக்தியையும் விரயம் செய்வதற்கான ஏமாற்று வழிதான் இது.

இதுவரை கிடைத்த ஒரேயொரு முன்னேற்றம் ஜெர்மனியில் உள்ள பிரேமன் நகரில் 2013 டிசம்பர் மாதத்தில் அமர்ந்த நிரந்தர மக்கள் தீர்பாயம் வழங்கிய தீர்ப்பு ஒன்று மட்டுமே. ஐநா மனிதவுரிமை கவுன்சில் அமர்வுகளை ஈழத்தமிழர் ஊடகங்கள் பேசும் அளவுக்கு நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்புகளை எமது ஊடகங்கள் பேசுவதில்லை. இது ஏன் என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.201803asia srilanka missing உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

கேள்வி – இவ்வாறானதொரு நிலைக்கான முக்கியமான காரணங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – எமது போராட்டம் அழிக்கப்பட்டதன் பின்னணியையும் தொடர்ந்து எமது உரிமைகள் மறுக்கப்படுவதற்கான பின்னணியையும் புரிந்து கொள்வதற்கு பூகோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம். எமது போராட்டத்தை பற்றிய ஆழமான அறிவு மட்டும் இத்தகைய தெளிவை தர மாட்டாது. உலகளாவிய ரீதியில் மக்களின் போராட்டங்களுக்கு என்ன நடந்தது நடக்கிறது என்ற வரலாற்று அறிவு அவசியம்.

இதை மையநீரோட்ட ஊடகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது. அவை மேற்குலக நன்மை சார்ந்தே பாதி உண்மைகளை மட்டும் செய்திகளாக வெளியிடும்.
இலங்கை தீவின் பூகோள கேந்திர முக்கியத்துவம் பற்றி, அதனுடன் பின்னிப் பிணைந்து நிற்கும் பூகோள அரசியலின் யதார்த்தம் பற்றி ஈழத்தமிழ் அரசியல் வாதிகளோ வேறெந்த தமிழர் தரப்போ மக்களுக்கு பெரிதாக அறிவூட்டவில்லை. இதனால் நாம் இதுபற்றிய புரிதல் போதாமையில் இருக்கிறோம். தமிழரின் ஊடகங்களும் தமிழருக்கு இந்த விழிப்புணர்வை கொடுக்க தவறுகின்றன.

இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினால் வல்லரசுகளுக்கு இத்தீவு மிகவும் தேவையாக உள்ளது. இது இன்று நேற்று தோன்றியதல்ல. காலனிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. சிங்களவர்களை ஆரியர்களாக அன்று பிரித்தானிய ஆய்வாளர்கள் சித்தரித்தது இதற்காகவே. ஆரியவாதம் மேலோங்கி இருந்த காலம் அது. இத்தீவின் தேவை வல்லரசுகளுக்கு இன்றும் இருப்பதால், ஆரிய போதை ஊட்டப்பட்ட சிங்கள மக்களை இன்றும் அது இலகுவாக கையாளுகிறது.

முள்ளிவாய்கால் போர்குற்றங்களை விசாரணை செய்வோம் என்று சிங்களவர்களை பயமுறுத்துவதும் இன்று மேற்குலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். உலகெங்கும் கெட்டவர்களை அரசியலில் அமர்த்தி அவர்களை ”நமது கெட்டவர்களாக” நட்பு கொண்டாடுவது ஐ-அமெரிக்காவின் ஒரு கைவந்த கலை.
அண்மையில் ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கை தீவில் நடந்த தாக்குதல்களின் பின்னணியிலும் இந்த மேற்குலக வல்லரசுகளின் கை இருப்பதை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியர்களை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்காக 1980களில் இலங்கையில் உருவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய தீவிரவாதம்.

கேள்வி – வன்னியில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பேரழிவுகளை ஏன் அனைத்துலக சமூகத்தால் தடுத்து நிறுத்த முடியாமற் போனது ?

பதில் – இன்றைய அனைத்துலக சமூகம் என்று நாம் எதை கருதுகிறோம். மேற்குலகமா? சீனாவா? இந்தியாவா? ஐ-நாடுகளா? இவற்றில் எவையாவது உலகில் நீதி நிலைநாட்டுவதற்காக தன்னலம் இன்றி உழைக்கின்றனவா? இல்லையல்லவா? அப்படியானால் இதை தடுப்பதால் இவற்றில் எவருக்கு இலாபம்? எவருக்கும் அதை தடுப்பதால் இலாபம் இல்லாமல் போனது ஈழத்தமிழரின் துர்ரதிஸ்டம். இருந்தாலும் இத்துணை மோசமாக ஒட்டுமொத்த மக்கள் அழிக்கப்படும் போது உலகம் கைகட்டி பார்த்துக்கொண்டு நிற்கும் என்பதை எம்மவர் எவரும் நம்பியிருக்க மாட்டார்கள். உலகில் நீதி எவ்வாறு கோலோச்சுகிறது என்பதையே இது காட்டுகிறது.

கேள்வி – இறுதிப் போரின் நேரடிச் சாட்சிகளுள் ஒருவர் என்ற வகையிலும், ஒரு மனிதவுரிமைச் செயற்பாட்டாளார் என்ற வகையிலும் அங்கு சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப் மனிதவுரிமை மீறல் செயற்பாடுகளாக, மானுடத்திற்கெதிரான குற்றச் செயலாளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – 1956ம் ஆண்டிலிருந்த நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள், 1983ம் ஆண்டு ஜுலாய் படுகொலைகள், தென் தமிழீழத்தில் தமிழ் கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது, தமிழீழம் எங்கும் தமிழர் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகள் சித்திரவதைகள், தமிழ்பெண்கள் மேல் நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், இன்றும் தொடரும் நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு எல்லாமே மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்தான்.

முள்ளிவாய்க்கால் இவற்றிற்கு சிகரம் வைத்தது. தற்கால உலக நீதி இந்த கொடிய இனவழிப்பை தடுக்கும் என்று நாம் நம்பியது எமது தவறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி போரில் இடம்பெற்ற பல சம்பவங்களை நிசோர் பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபரங்கள் சேகரித்தார்கள். அவற்றை தொடர்ச்சியாக நிசோர் அறிக்கைகளாக வெளியிட்டோம். 2008 டிசம்பர் மாதம் கொத்துக்குண்டுகள் வன்னியில் போடபட்டது பற்றியும் நிசோர் பணியாளர்கள் எடுத்து வந்த தரவுகளை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டோம்.

இக்காலத்தில் நான் புதுக்குடியிருப்பில் இருந்த செந்தளிர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்தேன். ஒரு குண்டு தக்குதலின் போது இச்சிறுவர் இல்லத்திலும் குண்டுகள் விழுந்தன. அருகிலிருந்த வள்ளிபுனம் பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முல்லைதீவு வைத்தியசாலையின் ஒரு கிளை மேல் சனவரி 2009 இல் எறிகணை தாக்குதல் நடந்தது

2009 மார்ச் மாதம் நாம் இடம் பெயர்ந்து முள்ளிவாய்காலுக்கு வந்து விட்டோம். பொதுமக்கள் நெரிசலாக கூடராங்களில் இருந்தோம். எமது கூடாரத்தை சுற்றி எறிகணைகளாலும் விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுகளாலும் நடந்த இறப்புக்கள் பற்றி எமது காதுக்கு செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எமது கூடாரத்துக்கு மிக அருகில் விழுந்த ஒரு குண்டில் குழந்தைகள் உட்பட பலர் பலியானார்கள்.

கேள்வி – இனவழிப்புக்கான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய தமிழர் உரிமைகளை மீள நிலைநிறுத்த தமிழர் தரப்புகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – நாம் ஒரு போராடும் மக்கள். மேற்குலக அரசுகளுடன் கைகோர்த்து போராட்டத்தில் வெற்றி பெறலாம் என்பது மூடத்தனம். நாம் ஒரு போதையூட்டப்பட்ட அரசியல் தெளிவற்ற மக்களாக இருந்தால் மட்டுமே மேற்குலகம் எம்மோடு கைகோர்க்கும். அப்போதுதான் எம்மை சுலபமாக அது கையாளலாம்.
ஈழத்தமிழர் விடுதலைக்காக நாம் இரண்டு வழிகளை ஒரே நேரத்தில் பின்பற்றலாம்.DSC02444 உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

முதலாவது உலகெங்கும் உள்ள பல போராடும் மக்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். நாம் வாழும் நாடுகளில் உள்ள உலக மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களுடனும், சிங்களவர்கள் உட்பட நாம் இணைய வேண்டும்.
இரண்டாவது, தேசியம் மட்டுமே நீதிக்கான வழியல்ல என்பதை உணர்ந்து எமது அமைப்புக்களிலும் எமது சொந்த வாழ்க்கையிலும் நாம் சமூக நீதியை முன்னிறுத்த வேண்டும். சாதி ஒழிப்பு, சமத்துவம், ஆடம்பரமின்மை, கூட்டுணர்வு போன்றவை எம்மை உண்மையான விடுதலைக்கு தயார் செய்யும்.

விடுதலை ஒரு நீண்ட பயணம். ஈழத்தமிழராகிய நாம் அதில் நெடுந்தூரம் வந்து விட்டோம். மிகுதி தூரத்தையும் உறுதியுடன் கடக்கலாம். இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து நிற்கிறோம்.பிரிவுகள் இயற்கையானதே. பிரிவுகளிடையேயும் தேசிய விடுதலையும் சமூகநீதியும் என்ற இரட்டை நோக்கம் பற்றிய தெளிவு இருந்தால் நாம் ஒன்றாக பயணிக்கலாம். இலக்கை அடையலாம்.