2023 சென்னைப் புத்தகக் கண்காட்சி தமிழர் வரலாற்று பாதைக்கு  வெளிச்சம் காட்டுகிறது – கவிபாஸ்கர்

104 Views

புத்தகச்சாலையில் வாசகர் வெள்ளம்! பார்க்கும் திசையெல்லாம் புத்தகம் சுமந்து செல்லும் படிக்குநர்கள்! தமிழ்ச்சமூகம் எப்போதும் அறிவுச்சமூகம் என்பதை புத்தகச்சாலைகள் நமக்கு நம்பிக்கை தருகின்றன.

ஆம்! சென்னையின் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி மிகச்சிறப்பாக நடந்தேறுகிறது.நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இந்த புத்தகக் கண்காட்சியை ஜனவரி 06 தொடங்கி  22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 800 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில், திருவிழா கூட்டத்தைக் காணும் மக்கள் வெள்ளம் போல் மக்கள் அலைமோதுகிறார்கள். அதுவும் விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாய் வருகிறார்கள் உள்ளபடியே மகிழ்வளிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரும் புத்தக கண்காட்சிக்கு வருகை தருவது மட்டுமன்றி பொதுமக்களும் இக்கண்காட்சி கண்டுகளிப்பது வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மத்தியில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கி அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நூல்களின் விற்பனைகளை அதிகப்படுத்துவதற்காகவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர், 1976ஆம் ஆண்டு ஒரு தனிக் கூட்டமைப்பை உருவாக்கி கடந்த 28 ஆண்டுகளாக இக்கண்காட்சியை நடத்துகின்றனர்.

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் உயிர் இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்குமான தொடர்பு,” என்பார் எழுத்தாளர் தொ.பரமசிவன் அய்யா! அப்படியாக ஓர் உயிரோட்டான பிணைப்பை புத்தகக் கண்காட்சி ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல!

புத்தகங்களுக்கும் வாசகர்களுக்குமான உறவு என்பது தமிழர்களிடம் தொடர்ந்து பலம் பெற்று வருவதை ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளியாகும் புத்தகங்களின் எண்ணிக்கைகள் மூலமாகவும் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பின் மூலமாகவும் நம்மால் உணர முடியும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழில் பல்வேறு தலைப்புகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய நூல்கள் வெளிவந்துள்ளது!

ஆம் ‘2022ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிந்தைய காலகட்டத்தில் இருந்து தற்போது 2023ஆம் ஆண்டு ஜனவரி வரை தமிழ் மொழியில் பல்வேறு  புதிய தலைப்புகளின் கீழ் சுமார் 12 ஆயிரம் நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

பல்வேறு எழுத்தாளர்களின் புதிய புத்தகங்கள், புதிய வெளியீடுகள், புதிய எழுத்தாளர்களின் அறிமுக புத்தகங்கள் போன்ற அனைத்து வகை புதிய புத்தகங்களும் இதில் அடக்கம்.  தேசிய அளவில் இவ்வளவு அதிகளவு எண்ணிக்கையிலான புத்தகங்கள் தமிழ் சமூகத்திடமிருந்து மட்டுமே வெளியாகிறது என்றால் எவ்வளவு பெருமை!

ஒரு இனத்தை ஒடுக்க வேண்டுமென்றால் அவர்களது எழுத்தை ஒடுக்கினால்போதும், அவர்களது நூல்களை ஒடுக்கினால்போதும்.  இனம் அழிந்துவிடும். அதனால்தான் இனப்படுகொலையின்போது தமிழர்களுடைய யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. காரணம்  எழுத்தும், புத்தகங்களும் ஆதி காலந்தொட்டு தமிழர்களின் மையப்பகுதியாக எப்போதுமே விளங்கி வந்திருக்கிறது.  ஆனாலும் எத்தனை யாழ்ப்பாண நூலகங்கள் எரிக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாய் மேலெழுந்து புதிய புதிய யாழ்ப்பாண நூலகங்கள் தமிழர்களிடையே உருவாகிக் கொண்டுதான் இருக்கும்!

சமூக வலைதளங்கள், கிண்டில், இ.புக் போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இனி யாரும் புத்தகங்களை தேட மாட்டார்கள் என்ற மாயை உருவானது. ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை. மாறாக புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களை வெகுமக்களிடம் வெகுவாக கொண்டு சேர்ப்பதில் சமூக வலைதளங்கள் இன்று பெரும்பங்கு வகிக்கிறது.

இன்றைய நிலையில் தமிழர் வரலாற்று நூல்களை தேடிப்படிக்கும் பழக்கம் இளைஞர்களிடைய அதிகமாகிருக்கிறது. எடுத்துக்காட்டுகாக, பொன்னியின் செல்வம் படம் வெளிந்த சமயத்தில் சோழர்களின் வரலாற்றை தேடி படிக்கும் நிலை அதிகமானது. அந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நூல்கள் வெகுவாக விற்பனையானது. இவ்வாறாக ஒரு செய்திகுறித்து சமூக வலை தளங்களில் பரவுதல் தொடர்ந்தால் அது குறித்த நூல்கள் அறிமுகமாகின்றன.

விழிப்புணர்வும் – தமிழர் அரசியலும் – நாளுக்குநாள் வேகமெடுக்கும் நூலையில் வரலாறுகளை தேடிப்படிக்கும் பழக்கும் வாசகர்கள் மாணவர்கள் இளைஞர்களிடையே அதிகமாகியிருக்கிறது எனலாம்!

இளைஞர்கள் தங்களுக்கான நூல்களை சுதந்திரமாகத் தேர்வு செய்ய இந்தப் புத்தகக் கண்காட்சி அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்! தமிழ் இளைஞர்கள் சரியான திசைவழியில் நடக்க புத்தகக் கண்காட்சி வெளிச்சம் காட்டுகிறது. புத்தகம் வாங்குவது நாகரீகம் என்று வாங்காமல் அதை முழுமையாக படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்!

சென்னை புத்தகச் சந்தையில் இம்முறை வாங்குவதற்கான புத்தகப் பரிந்துரைகளை பலர் முன்வைத்து வருகிறார்கள். புதிய வாசகர்கள், பழசுகளைப் படித்து முடித்து, புதியவைகளைத் தேடும் வாசகர்கள் என்று பலவகையான வாசகர்களுக்குரிய பல அரிய நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டுவருகின்றன. முக்கியமாகக் கருதும் பல நூல்களின் வரிசையில், இன்னமும் போதிய வெளிச்சம் கிடைக்கப் பெறாத நூல்களில் முக்கியமானது, தமிழின் முதல் வரலாற்று நாவலான “மோகனாங்கி” பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த சரவணமுத்துப் பிள்ளையால் எழுதப்பட்டு – 123 வருடங்களுக்குப் பின்னர் -2018 இல் மீண்டும் பதிப்பிக்கப்பட்ட, தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல். பொன்னியின் செல்வன் போல வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட நாவல் அல்ல. இது நேரடியான வரலாற்று நாவல்.  இப்படி பலதரப்பட்ட தமிழர் பொக்கிசங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நூல்கள் வெளிவந்துள்ளன. வாசகர்கள் கண்டுணர்ந்து படிக்கவேண்டும்.

2023 சென்னை புத்தகக் கண்காட்சி தமிழர்களின் வரலாற்றுப் பாதைகளுக்கு வெளிச்சம் காட்டுகிறது! ஆதித்தமிழ் நூல்கள், புதிய தாள்களில் ஏறி அமர்ந்து நம்மை வரவேற்கிறது! ஒவ்வொரு அரங்கிற்குள்ளும் வரலாற்றுப் புதையல்கள் பொதிந்து கிடக்கின்றன. வாசகர்களின் விரல் தொடும் போது நம் முன்னோர்களின் வரலாறு மீண்டும் மேலெழும் என்று பொருள்!

அறிவை விரிவு செய்ய  நல்ல புத்தகங்களே நமக்கான  நல்ல பாதை!

Leave a Reply