உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உடைவும் -பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் அரசியல் களத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு விடயங்கள் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கின்றன. தெற்கில் ஒரு விடயமும், வடக்கு கிழக்கில் ஒரு விடயமுமாக இடம்பெற்றுள்ள இந்த இரண்டு விடயங்களும் நாட்டின் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்த வல்லன என்பதில் சந்தேகமில்லை. அந்த மாற்றங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கும் சீரானதோர் அரசியல் நிலைமையை உருவாக்குவதற்கும் பயன்படுமா – அடித்தளமாக அமையுமா என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. இந்த கேள்விக்கான பதில் இரு விடயங்களினதும் ஏற்படுகின்ற அடுத்தடுத்த முன்னேற்ற நிலைமைகளிலேயே தங்கியுள்ளது.

முதலாவது 2019 ஆம் ஆண்டு கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பான பதவிகளில் அப்போது இருந்தவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விடுத்திருக்கின்ற உத்தரவு. இது இலங்கையின் அரசியல் வரலாற்றிலும், நீதிமன்ற வரலாற்றிலும் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது மிக மோசமான நாட்டில் முன்னொருபோதும் நடந்திராத வகையிலான பயங்கரவாதத் தாக்குதல்களாகும். அப்பாவிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். அது தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடையது. அது மிக மோசமானதொரு சம்பவம். அந்த சம்பவம் குறித்த புலனய்வு அறிக்கைகள் முற்கூட்டியே தேசிய பாதுகாப்புத் தரப்பினருக்குத் துல்லியமாகத் தெரிவிக்கப்பட்டிருந்த பின்னரும், அது குறித்து உரிய கவனத்தை அவர்கள் செலுத்தவில்லை. அவற்றை உதாசீனம் செய்து நடந்து கொண்டிருந்தார்கள்.

முற்கூட்டியே எங்கெங்கு தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளது யாரால் நடத்தப்படவுள்ளது என கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். இதனை அவர்கள் செய்யத் தவறிவிட்டனர். இதன் மூலம் அவர்கள் தமது தலையாய பொறுப்புக்களை உதாசீனம் செய்துவிட்டனர். இதன் விளைவாக  ஆலயங்களிலும், உல்லாச விடுதிகளிலும் தங்களது இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந் அப்பாவிகளான நூற்றுக்கணக்கானவர்கள்; கொல்லப்பட்டார்கள். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகிவிட்;டனர்.

பயங்கரவாதத் தாக்குதல்களின் மூலம் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்டவர்களில் 12 பேரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளின் முடிவிலேயே, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 310 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 300 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவையும், சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பொறுப்புக்களைத் தட்டிக்கழித்தவர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கமும் இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாவைச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் அநியாமயாகக் கொல்லப்பட்டவர்களுக்ளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரியே வழக்குத் தாக்கல் செய்வார்கள். அந்த வழக்கு விசாரணைகளின் முடிவில் நீதி வழங்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுவதே பொதுவான நடைமுறையாகும்.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவ விடயத்தில் முதலில் இழப்பீடு கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்கு விசாரணைகளிலேயே நீதிமன்றம் இழ்பபீடு; வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கின்றது. அதிரடி என்பது இலங்கையின் அரச தரப்பினருக்கு எதிராகத் துணிகரமாக இத்தகைய வழக்குகள் இதுவரையில் தாக்கல் செய்யப்படவில்லை. அதிரடியாக மில்லியன் கணக்கிலான பணத்தொகையைச் செலுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கும் தேசிய பதுகாப்புத்துறை சார்ந்தவர்களுக்கும் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டதாகவும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது என்றால், சம்பந்தப்பட்ட சம்பவத்தில் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பது நிரூபணமாகியிருக்கின்றது. குற்றம் இழைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே, குற்றம் இழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. இந்த உத்தரவு அடுத்த கட்டமாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதற்கு உரிய நீதித்துறை சார்ந்த வழியைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது.

தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். அந்த பொறுப்பைக் கொண்டவர்களாகிய ஆட்சியாளர்களும். அதிகாரிகளும் கடமை தவறியதற்கான தண்டனையை அனுவித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதன் வழியில் யுத்தகாலத்தில் பொறுப்பு வாய்ந்த அரச தலைவர்களினாலும் அதிகாரிகளினாலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிவழங்கவும் நிர்ப்பந்திக்க முடியும் என்ற சமிக்ஞை ஒரு மெல்லிய கோடாகத் தோற்றம் தந்திருக்கின்றது. எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினரும் அவர்கள் சார்ந்த சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்துறை நிபுணர்களும் இந்த மெல்லிய சமிக்ஞையைப் பெரிதாக்கி வலுவுடையதாக்கி நீதியைத் தேட முற்பட முன்வர வேண்டியது அவசியம்.

இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த அரசியல் அமைப்பாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உடைந்து போயிருப்பது இரண்டாவது விடயமாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலிகள் நாடாளுமன்ற அரசியலின் மூலம் போராட்ட நடவடிக்கைகளையும் சிவில் சார்ந்த நிலையிலான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பே தமிழ்த்தேசிய கூட்டமைப்பாகும்.

தமிழ்த்தேசியத்தின்பால் நாட்டம் கொண்டிருந்த அரசியல் தலைவர்களையும் அவர்களது கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. ஆனால் இந்தக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக அப்போது உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை. பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும்போது வேண்டத்தகாத விளைவுகளும் நிகழ்வுகளும் இடம்பெறலாம் என்ற காரணத்திற்காகவோ என்னவோ அது உடனடியாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை. அது குறித்து கவனம் செலுத்தப்படவுமில்லை.

ஆனால் பின்னர் எழுந்த அரசியல் நிலைமைகள் காரணமாக, மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று அவர்களின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகத் திகழ்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தபோது, அது குறித்து எழுப்பப்பட்ட குரல்களை கூட்டமைப்புக்குத் தலைமையேற்றிருந்த தமிழரசுக்கட்சி தனது மேலாண்மை அரசியல் போக்கைக் கொண்டு அடக்கிவிட்டது. இறுதியாகக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி பிரிந்து உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது என்ற தீர்மானத்தை மேற்கொண்ட நிலையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என்பதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தது.

வேடிக்கை என்னவென்றால் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்த போதிலும், தான்வசப்படுத்தியிருந்த உள்ளுராட்சி சபைகளில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற முடியாமற் போயிருந்ததைச் சுட்டி;ககாட்டி அத்தகைய நிலைமை இந்தத் தேர்தலின் பி;னனர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதாகக் காரணம் கூறப்பட்டிருக்கின்றது.

இந்தத் தேர்தல் தொகுதி முறையும் விகிதாசார முறையும் கலந்த நிலையிலான ஒரு தேர்தலாகும். இந்த சிக்கலான நிலையில் கட்சிகள் தனித்தனியாகப் போட்டிய்pட்டால் மட்டுமே வெற்றி பெற்று, தேர்தலின் பின்னர் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து வலுவான ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழரசு;கட்சி புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றது.

அரசியலில் முதிர்ந்தவராகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சம்பந்தனும், சட்டத்துறை விற்பன்னராகக் கருதப்படுகின்ற கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுமந்திரனும் ஒரு விடயத்தை மறந்துவிட்டார்கள். மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முழுமையாக ஆதரிப்பார்களேயானால், கூட்டமைப்பு ஒற்றுமையாகத் தேர்தலில் போட்டியிடுமானால் எந்தவொரு நிலையிலும் கூட்டமைப்புக் கட்சிகளே வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.