2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 1.30 இற்கு பாராளுமன்றில் பாதீட்டினை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பின்னர் குழுநிலை விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்படும்.

பாதீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பாதீட்டில் எதிர்வரும் நிதி ஆண்டுக்கான அரச செலவீனமாக 7,885 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னையிலிருந்து மீண்டெழுவதற்கு, பாராளுமன்றத்தில்  இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏனைய வரவு செலவுத் திட்டங்களை விடவும் மிக முக்கியமானதொரு வரவு செலவுத் திட்டமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.