கடனில் மூழ்கும் சமூகம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் சமகால நெருக்கீடுகள் அனைவரது வாழ்விலும் பல்வேறு தாக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

பலர் வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு உரிய வருமான மார்க்கமில்லாது திண்டாடும் நிலையில் கடன் சுமைகளும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வகையில் மலையக மக்களின் கடன்சுமை அண்மைகாலமாக மிகவும் அதிகரித்துள்ளதோடு  அடுத்து கட்ட நடவடிக்கை தொடர்பில் செய்வதறியாது திக்குமுக்காடிக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை கட்டியெழுப்புவதாக கூறிய அரசியல்வாதிகள் இன்று வாயடைத்துப் போயுள்ள நிலையில் உலகில் வறுமை மிக்க நாடாக இலங்கை பெயரெடுத்திருக்கின்றது.

ஊழல்வாதிகள் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கியுள்ளதோடு நாடு இப்போது உலக நாடுகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. ஊழல்வாதிகள் நாட்டிலுள்ள வளங்களைச் சுரண்டி ஏப்பம் விட்டுள்ள நிலையில் அப்பாவி மக்கள் பலிக்கடாவாகியுள்ளனர்.

மக்கள் மீதான சுமை அதிகரித்து வரும் நிலையில் வரி, விலைவாசி அதிகரிப்பு எனப்பலவும் இதற்கு ஏதுவாகியுள்ளன.உலகில் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் உணவின்றி அல்லல்படுகின்றனர்.சனத்தொகையை அதிகமாகக் கொண்ட வறிய நாடுகள் இதில் அதிகளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.இது  “அடுப்பில் வெந்தவனை தாழியில் இட்டதற்கு ” சமனாகும்.இதேவேளை 3.1 மில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெற்றுக்கொள்ள முடியாது இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளமையும் தெரிந்ததேயாகும்.

இலங்கையின் அண்மைக்கால சூழ்நிலைகள் பட்டினி, உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு சிக்கல்களுக்கும் அடித்தளமாகியுள்ளன.இந்தவகையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பாக இலங்கையின் கிராமப்பகுதிகளில் 83 வீதமானவர்களும், நகரப்பகுதியில் 17 வீதமானவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

மலையகத்திலும் இந்நிலைமை அதிகரித்து காணப்படுகின்றது.இதேவேளை 5.3 மில்லியன் பேர் உண்ணும் உணவைக் குறைத்தோ அல்லது தவிர்த்தோ வருவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன.பொருளாதாரக் குற்றங்கள் உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஏதுவாகியுள்ளன.12 வீதமாகவிருந்த போஷாக்குக் குறைபாடு 14 வீதமாக உயர்வடைந்துள்ளது.இலங்கை இத்தகைய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதேவேளை ஆட்சியாளர்கள் அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதை விடுத்து தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதிலும் வீண் படாடோபங்களுக்கும் முக்கியத்துவமளித்து வருவதாக கண்டனக் குரல்கள் மேலோங்கி வருகின்றன.

இலங்கையின் சமகால சூழ்நிலைகளால் வருமானப் பற்றாக்குறையால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் சுமை இவர்களின் குரல்வளையை நெரித்து வருகின்றது.பெருந்தோட்ட மக்களுக்கும் கடன்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அவர்களது  வருகையின் பின்னர் அம்மக்களை கடனாளியாக வைத்திருப்பதிலேயே நிர்வாகத்தினர் ஆர்வம் செலுத்தினர்.”துண்டு முறையின் கீழ் ஒவ்வொரு தொழிலாளியும் தோட்ட நிர்வாகத்திற்கு கடனாளியாக்கப்பட்டார்.அவ்வாறு கடன்பட்ட தொகை ரூபா 50 தொடக்கம் 250 ரூபா வரையிலானதாக இருந்தது.

இவ்வாறு ஒவ்வொரு தொழிலாளியும் தோட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்ற கடன்கள் பல்வேறு தேவைகளின் பொருட்டு பெறப்பட்டவையாக இருந்தன.கங்காணியின் கடையிலிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் பெறுமதியும் கடனடிப்படையிலேயே வழங்கப்பட்டது.

ஒவ்வொரு தொழிலாளியும் தோட்ட நிர்வாகத்திடமிருந்து சராசரியாக ரூபா 100 அளவிலான கடன் சுமையைக் கொண்டிருந்தான்.தொழிலாளி பெற்றுக் கொண்ட ஒவ்வொரு 10 ரூபாவுக்கும் கங்காணி மாதாந்தம் ஒரு ரூபா வட்டியினை அறவிட்டார். இதற்கமைய வருடாந்தம் தாம் பெற்ற கடனுக்கு ஒவ்வொரு தொழிலாளியும் 120 வீத வட்டியினை செலுத்த வேண்டியவராக இருந்தார்.

தொழிலாளரின் சம்பளத்தில் கணிசமான பங்கு வட்டிச் செலுத்தல்களாக கங்காணியையும் தோட்ட நிர்வாகத்தையும் சென்றடைந்தது என்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.தொழிலாளர்களின் இந்த கடன்படுநிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆய்வு வெளிப்பாடுகள்

நாட்டின் தற்போதைய நிலைமைகளால் பெருந்தோட்ட மக்களில் 84, வீதத்தினர் கடன்சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.பொருளாதார நெருக்கடியினால் 60 வீதமானவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு சிறந்த நிலையில் இல்லாதுள்ளது.22 வீதமானோர் தனிப்பட்ட பாதுகாப்பின்மையால் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த நான்கு வாரங்களில் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து 07 வீதமான மாணவர் இடைவிலகியுள்ளனர்.சிறுவர் மற்றும் வீட்டு வன்முறைகளின் அதிகரித்த போக்குகள் என்பன குறித்தும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.அத்தோடு 18 வயது பூர்த்தியடையாத பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக 51 வீதமான வர்கள் ஆய்வின்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் 3 தொடக்கம் 6 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிகள் குறையாதவிடத்து18 வயதை பூர்த்தியடையாத பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் வீதம் மேலும் அதிகரிக்கக்கூடுமென்றும் ஆய்வு தெளிவுபடுத்துகின்றது.

கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, குடும்பங்களில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை   அதிகரிப்பு, வறுமையின் உக்கிரம் போன்ற பலவும் வீட்டு வன்முறையின் அதிகரிப்புக்கு வித்திட்டிருந்தமை நீங்கள் அறிந்ததேயாகும்.வீட்டு வன்முறையால் உயிரிழப்புகளும், உடைமைச் சேதங்களும் ஏற்பட்டதோடு  சிலர் வலதுகுறைந்த நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர்.அத்தோடு சில சிறுவர்கள் உளரீதியான நெருக்கீடுகளையும் எதிர்கொண்டிருந்தனர்.

ஏதேனும் ஒரு வகையில் உடனடியாக பணத்தை பெற்றுக் கொண்டு  தனதும் தன்னுடைய குடும்பத்தினதும் வயிற்றுப் பசியை தணித்துக் கொள்ளும் நோக்கில் தம்மிடமுள்ள தங்கநகைகளை அடகு வைக்கும் நடவடிக்கைகளும்  தற்போது பெருந்தோட்டங்களில் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.சில மோசடி வியாபாரிகள் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அதிகரித்த வட்டியை அறவிட்டு வருவதும்  கொடுமையானதாகும்.

இவ்வாறு அடகுவைத்த தங்கநகைகளை மீட்டுக் கொள்ளமுடியாது பலர் மனம்வருந்தி அல்லல்படுவதையும் காணமுடிகின்றது.சமகால நெருக்கடியினால் மேலெழுந்த கடன் தொல்லையினால் பலர் செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளனர்.

தோட்டத் தொழிற்றுறையை மட்டுமே நம்பி வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின், மாற்று தொழில் முயற்சியின் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாகவே வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.கால்நடை வளர்ப்பு, விவசாய நடவடிக்கைகள், சுயதொழில் முயற்சிகள் என்பன குறித்து இதன்போது அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது.எனினும் உரிய சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதில் இழுபறி நிலைகளே இன்னுமுள்ளன.

தோட்டப்புற இளைஞர்கள் பலர் உரிய தொழில்வாய்ப்பில்லாது பெற்றோர்களில் தங்கி வாழ்வோராக இருந்து வருகின்றனர்.குடும்பங்களின் கடன் சுமை அதிகரிப்பிற்கு இதுவும் உந்துசக்தியாகி இருக்கின்றது.இந்நிலையில் இளைஞர்களின் தொழில் வாய்ப்பு கருதிய நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படுதல் வேண்டும்.

மலையக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தொழில் வாய்ப்புக்களை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.தொழிற்பயிற்சி நிலையங்களை இளைஞர்களின் நலன்கருதி மலையகத்தில் ஏற்படுத்துவதும் பொருத்தமாகும். இதன்மூலம் இளைஞர்கள் ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சியை  பெற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேற முடியும். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.இதனால் பெருந்தோட்ட குடும்பங்களின் பொருளாதார சிக்கலுக்கு ஓரளவேனும் பரிகாரம் கிடைக்கும்.

“சேமிப்பு என்பது பற்பசையைப் போன்றது.பிதுக்கி எடுப்பது சுலபம். ஆனால் உள்ளே தள்ளுவது என்பது மிகமிகக் கடினம்” என்று கூறுவார்கள். ஆனாலும் எவ்வகையிலேனும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாம் சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய நிலையும் ஏற்படாது. சிறுகச் சேமித்த பலர் இன்று பெருக  வாழ்வதை ஒவ்வொருவரும் முன்னுதாரணமாக கொண்டு சேமிப்பில் ஆர்வம் செலுத்துதல் வேண்டும்.

பெருந்தோட்ட மக்களிடையே சேமிப்பு பழக்கம் என்பது நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாட்டினைக் கொண்டுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இம்மக்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் சேமிப்பு நடவடிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்.”செலவின் பின்னரே சேமிப்பு என்பதைவிட சேமிப்பின் பின்னரே செலவு” என்பதனை வழமையாக கொள்ள வேண்டும்.

சேமிக்கப் பழகிக் கொள்ளுமிடத்து சேமிப்பு எமக்கு கை கொடுக்கும் என்பதனை ஒருபோதும் எவரும் மறந்து செயற்படக் கூடாது. இயலுமானபோது சேமிப்பது குறித்து பெருந்தோட்ட மக்கள் உறுதி பூணுதல் வேண்டும். பெருந்தோட்ட மக்கள் கடன்களில் இருந்தும் மீண்டெழுவதற்கு சேமிப்பும் மிகவும் அவசியமானது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.