ஆஸ்திரேலியா- சுமார் 20 லட்சம் தற்காலிக விசாவாசிகள்!

396 Views

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தற்காலிக விசாவாசிகள் தொடர்ந்து உதவிகள் தேவைப் படுவோர்களாக உள்ளனர் என ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று சூழலின் தொடக்க காலமான ஏப்ரல் முதல் ஜூலை 2020 வரையில், அவசர நிவாரண உதவிகளை பெற்ற தற்காலிக விசாவாசிகளில் 80 சதவீதம் பேர் அவ்வுதவியை உணவு மற்றும் மருந்து தேவைகளுக்காக பெற்றுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக விசாவாசிகள் செஞ்சிலுவை சங்கம் வழங்கிய அவசரகால நிவாரண உதவியை பெற்றிருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இச்சூழலிலும் அந்த விசாவாசிகள் பொருளாதார ரீதியாகக்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“வழக்கமாக அவசர தேவைகளுக்கு வழங்கப்படும் ஒருமுறை நிவாரண உதவியாக இது இருந்தாலும், இந்த உதவியை மீண்டும் கேட்டு தற்காலிக விசாவாசிகள் அணுகக்கூடும்  என எங்கள் ஆராய்வில் கண்டறிந்திருக்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார் செஞ்சிலுவை சங்க புலம்பெயர்வு திட்ட தலைமை அதிகாரி விக்கி மே.

சிறப்பு விசாக்களில் உள்ள நியூசிலாந்தினருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரும் எண்ணிக்கை கொண்ட தற்காலிக விசாவாசிகளாக வெளிநாட்டு மாணவர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில், பெரும்பாலான தற்காலிக விசாவாசிகள் அரசு வழங்கும் கொரோனா கால நிதியுதவிகளில் உள்ளடக்கப்படாதவர்களாக உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் செஞ்சிலுவை சங்கத்தின் மதிப்பீட்டின் படி, கடந்த ஜூன் 30 வரையிலான  காலம் வரை ஆஸ்திரேலியாவில் உள்ள தற்காலிக விசாவாசிகள் எண்ணிக்கை  சுமார் 20 லட்சம் ஆகும். இதுவே கடந்த மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாவாசிகளின் எண்ணிக்கை சுமார் 21 லட்சமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு 130 நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் பல தற்காலிக விசா வாசிகள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் சிக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply