லிபியா பாலைவனத்தில் காணப்பட்ட 20 சடலங்கள்

277 Views

தாகத்தினால் உயிரிழந்த 20 பேரின் சடலங்களை லிபிய பாதுகாப்பு படையினர் பாலைவனப் பகுதியில் கண்டெடுத்துள்ளனர்.

பாலைவனப் பகுதியூடாக பயணம் செய்த லொறி சாரதி ஒருவரே இந்த சடலங்களை அவதானித்ததுடன், காவல்துறையினருக்கும் அறிவித்துள்ளார். குப்ரா நகரில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சாட் நாட்டின் எல்லையில் இருந்து 120 கி.மீ தொலைவிலும் உள்ள பாலைவனத்தில் சடலங்கள் கடந்த செவ்வாய்கிழமை (28) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிக்கப் வாகனத்துக்கு அருகில் சிதைவடைந்த நிலையில் சடலங்கள் காணப்பட்டுள்ளன. அவர்கள் 14 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதியில் தற்போது 40 செல்சியல் வெப்பநிலை நிலவுவதால், வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்ல முயற்சித்து குடிநீர் மற்றும் உணவு இன்றி இவ்வாறு மரணித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இறந்தவர்களில் இருவர் லிபியாவை சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் சாட்டின் ஊடாக லிபியாவுக்கு வந்து வேறு நாடுகளுக்கு செல்ல முற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு லிபிய அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் லிபியாவின் ஊடாக பயணித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மட்டும் மெடிற்ரரேனியன் கடல்பகுதியை கடக்க முற்பட்ட 1500 இற்கு மேற்பட்ட அடைக்கலத் தஞ்சம்கோரும் மக்கள் இறந்ததாக அனைத்துலக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply