’20’ ஐ நிறைவேற்றிய பின் அமெரிக்காவுடனான உடன்பாட்டில் கோட்டா கையொப்பமிடுவார்; ரில்வின் சில்வா

அமெரிக்காவின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் ‘20 யாருக்கு ? – 20 யாருடையது ? “ என்ற தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

20ஆவது அரசமைப்பு திருத்தம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகார ஆசைக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அறிவுபூர்வமான செயல் என்று கூறமுடியாது. இது ஜனாதிபதியினுடைய பலவீனமாகும். அதன் காரணமாகவே தனது சகோதரரான பிரதமருக்கு கூட அதிகாரங்களைக் கொடுக்க விரும்பவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார். 20 ஐ நிறைவேற்றி அனைத்து அதிகாரங்களையும் தன் வசப்படுத்திக்கொண்டதன் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். நாட்டிலுள்ள தேசியசொத்துக்கள் விற்கப்படும்.

உரிமையாளர் யாரென்று கூறுவதற்கு அச்சப்படும் வகையில் 20ஆவது திருத்தம் அமைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன் பக்கத்தில் பார்க்கும் போது 20 இன் உரிமையாளராக உள்ளார். எனினும், அவருக்குப் பின்னாலுள்ள 20 இன் உரிமையாளர் அமெரிக்காவாகும். 20ஆவது திருத்தத்தால் மக்களுக்கோ, பாராளுமன்றத்திற்கோ, அமைச்சர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.

மாறாக இதன் அனைத்துப் பயனும் ஜனாதிபதியை மாத்திரமே சென்றடையும். அமெரிக்காவுக்கு ஏற்றாற்போல செயற்படுவதற்கு தனக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி 20 ஐ உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.