20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப் பொறி; கடுமையாகச் சாடுகின்றார் ரணில்

19 ஆவது திருத்தத்தின் மீது கைவைத்துள்ளமை ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது. தனிநபருக்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமாக 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்தது. நிறைவேற்று அதிகாரம் முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட்டால் இங்கு பிரச்னை ஏற்படாது. ஆனால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியை போன்று தனி நபருக்கு அதி கூடிய அதிகாரம் எனும் போது அதற்கு மக்கள் ஆணை கிடையாது.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வேறொரு வழியில் நிறைவேற்று அதிகாரம் இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பின் 19 ஆவது திருத்தம் குறித்து கவலைப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், தனி நபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மற்றும் அந்த முறைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ 2015 ஆம் ஆண்டு முயற்சித்தோம். ஆனால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் விதித்த தடையால் முடியாமல் போனது.

இந்த அரசாங்கத்தானால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. 19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். நாடோ மக்களோ முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கி செல்ல முடியாது” என்று அவர் தெரிவித்தார்.